மது அருந்திய நிலையில் ஓட்டுநர் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து கோட்ட மேலாளர்களுக்கும் அவர் அனுப்பிய சுற்றறிக்கை:
சமீபகாலமாக நமது ஓட்டுநர்கள் மற்றும் சில பணியாளர்கள் மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் கூறப்படுகிறது. இவ்வாறு மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றம்.
அவ்வாறு பணிபுரிந்தால் நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன், பயணிகளுக்கு நமதுபோக்குவரத்துக் கழகத்தின் மீதான நம்பிக்கை குறைவதால், நமது பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்பு உள்ளது.
எனவே, பணியாளர்கள் மது அருந்திய நிலையில் பணிபுரியக் கூடாது. அவ்வாறு பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
எனவே, இந்த குற்றத்துக்கான பின்விளைவுகளை அறிந்து, பணியில் ஒழுங்கீனத்துக்கு இடம் கொடுக்காமல் பணிபுரியுமாறு ஊழியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.