இந்திய விமானப் படையின்90-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் போர்விமானங்கள் மற்றும் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரிட்டிஷ் ஆட்சியில் 1932 அக். 8-ம் தேதி இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர், பாகிஸ்தானுக்கு எதிரான போர்கள் உள்ளிட்ட பல்வேறு போர்களில் எதிரிகளை வீழ்த்தி, இந்திய விமானப் படை வெற்றிவாகை சூடியுள்ளது.
இப்படை தொடங்கப்பட்ட நாளான அக். 8-ம் தேதி விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு நேற்றுடன் 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதையொட்டி, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் நேற்று விமானப் படைதினம் கொண்டாடப்பட்டது.
இதில், விமானப் படை வீரர்கள் மற்றும் போர் விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழு கேப்டன் நாகர்கோட்டி தலைமையில் கிரண், கேப்டன் சாய் கிரண் தலைமையில் சேட்டக் மற்றும் கேப்டன் மிஸ்ரா தலைமையில் பிலாட்டஸ் ரக ஹெலிகாப்டர்கள் இணைந்து, சாகசங்களை நிகழ்த்தின.
அதேபோல, ‘சுகாய்-30’ என்றஅதிநவீன போர் விமானம், வான்வெளியில் நிகழ்த்திக் காட்டிய பிரம்மாண்டமான சாகச நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து, விமானப் படைவீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. குறிப்பாக, வீரர்கள் நிகழ்த்திக் காட்டிய தற்காப்புக் கலை, உடற்பயிற்சிக் கலைகள், சைக்கிள் சாகசநிகழ்ச்சிகள் ஆகியவை பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொள்ளும் வகையில் அமைந்தன.
ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் இவற்றை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், விமானப் படையில்சேர வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்தசாகச நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.