அமிதாப் பச்சன் 80வது பிறந்தநாள்: ரசிகர்கள் கொண்டாட்டம்

மும்பை: 1942ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர் அமிதாப் பச்சன். ரசிகர்களால் பிரியமாக ஷெஹன்ஷா (மகாராஜா) என்று அழைக்கப்படுகிறார். இன்று பலகோடிக்கு அதிபராக அமிதாப் இருக்கிறார். ஆனால் ஆரம்ப காலத்தில் நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவர், வேலைக்காக கஷ்டப்பட்டவர். வானொலியில் செய்தி வாசிக்க சென்றபோது, குரல் சரியில்லை என நிராகரிக்கப்பட்டார். சினிமாவில் நடிக்கும் ஆசையில் பட நிறுவனங்களுக்கு சென்றபோது, உயரத்தையும் மெல்லிய உடலையும் பார்த்து கிண்டலடிக்கப்பட்டவர். கடும் முயற்சியால் பட வாய்ப்பு கிடைத்தது. ஆரம்ப காலகட்டத்தில் தங்குவதற்கு வீடு கூட இல்லாததால், பாலிவுட் காமெடி நடிகர் மெஹ்மூத்தின் வீட்டில் அவர் தங்கியிருந்தார். இந்தி சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ச்சியாக 13 தோல்வி படங்களை கொடுத்து ராசி இல்லாத நடிகர் என விமர்சிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு ஜன்ஜீர், ஷோலே, ஆமர் அக்பர் அந்தோணி, நஸீப், கூலி உள்பட பல வெள்ளி விழா படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் ஆனார்.

சினிமாவில் படிப்படியாக முன்னேறி தேசிய அளவில் பிரபலம் ஆனார் அமிதாப் பச்சன், தற்போது மும்பையில் மட்டும் 7 பங்களாக்களை வைத்துள்ளார். மும்பையில், அமிதாப் குடும்பத்துடன் ஜூஹூ பகுதியில் வசிக்கிறார். இந்த பங்களா தவிர மேலும் 6 வீடுகள் அவரிடம் உள்ளன. சமீபத்தில்தான் அதில் 2 வீடுகளை அவர் வாங்கியிருந்தார். அமிதாபின் சொத்து மதிப்பு ரூ.3,500 கோடி என கூறப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.50 கோடி வருவாயாக பெறுகிறார். படங்களில் மட்டுமின்றி, விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், பிற சொத்துகள் மூலம் அவருக்கு வருமானம் வருகிறது.
சம்பாதிக்கும் பணத்தில் பெரும் தொகையை தர்மத்துக்காகவும் செலவழிக்கிறார். ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தை தேர்வு செய்து விவசாயிகளின் கடன்களை அமிதாப் அடைக்கிறார். இதை பல ஆண்டுகளாக நடைமுறையாக வைத்திருக்கிறார். சினிமா தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் மளிகை சாமான்களை வாங்கி தருகிறார். பிற தொண்டு வேலைகளிலும் ஈடுபடுகிறார்.

அமிதாப் பச்சனுக்கு அவரது தந்தையை போல, கவிதைகள் எழுதுவது பிடித்த விஷயம். கவிதைகள் எழுதுவதற்காக விலையுயர்ந்த பேனாக்கள் பலவற்றை வாங்கி சேகரித்து வைத்துள்ளார். அமிதாபுக்கு Montblanc Honor de Balzaki என்ற பேனா மிகவும் பிடிக்கும். அவர் வைத்திருக்கும் பேனாவின் மதிப்பு 65 ஆயிரம் ரூபாய். இதுதவிர கைக்கடிகாரங்கள் மீதும் அமிதாப் பச்சனுக்கு அதிக மோகம். 1980லிருந்து இதுவரை அவரிடம் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் உள்ளன. நேற்று 80வது பிறந்த நாளையொட்டி வீட்டிற்கு வெளியே காத்திருந்த ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் அமிதாப் வாழ்த்துகளை பெற்றார். உலகம் முழுவதும் உள்ள அமிதாபின் ரசிகர்கள் கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும் அவரது பிறந்த நாளை கொண்டாடினர். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர் அமிதாபுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.