கோல்கட்டா :மேற்கு வங்கத்தில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு தொடர்பாக, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மாணிக் பட்டாச்சார்யாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு பள்ளி ஆசிரியர்கள் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து உள்ளது.
இதையடுத்து, நாடியா மாவட்டத்தின் பாலாஷிபாரா தொகுதி திரிணமுல் காங்., – எம்.எல்.ஏ.,வும், மேற்கு வங்க ஆரம்ப பள்ளி கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவருமான மாணிக் பட்டாச்சார்யாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவர், அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று முன்தினம் ஆஜரானார்.
அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்காமல் வழக்கை திசை திருப்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கரில் சோதனை
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை முதல்
அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை ராய்ப்பூர், ராய்கர், மஹாசமுந்த், கோர்பா உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்தன. சோதனைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, பா.ஜ., அரசு, மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக காங்., தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement