சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 16,888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
இதுகுறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், துறைச் செயலர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
தீபாவளியை முன்னிட்டு, சென்னை மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தினமும் வழக்கமாக 2,100 பேருந்துகள் இயக்கப்படும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் வழக்கமான 6,300 பேருந்துகளுடன், வெள்ளிக்கிழமை 1,430, சனிக்கிழமை 1,588, ஞாயிற்றுக்கிழமை 1,195 என மொத்தம் 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 10,518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற பகுதிகளில் இருந்து இயக்கப்படும் 6,370 பேருந்துகளுடன் சேர்த்து, தீபாவளிக்காக மொத்தம் 16,888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
போக்குவரத்துக்கு இடையூறின்றி பேருந்துகள் இயக்கவும், முக்கிய சாலைகளைப் பராமரிக்குமாறும் காவல், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். அதேபோல, தற்காலிக பேருந்து நிலையங்கள், பழைய பேருந்து நிலையங்களில் பேருந்துகளை நிறுத்தி, இயக்கத் தேவையான வசதிகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், 1800 425 6151, 044-247490002, 26280445, 26281611 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். அரசுப் பேருந்துகள் இயக்கம், புகார் தொடர்பாக 9445014450, 9445014436 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னையில் இருந்து செல்ல 38 ஆயிரம் பேரும், மற்ற இடங்களில் இருந்து செல்ல 18 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன், 3,062 கூடுதல் பேருந்துகள், சென்னையில் இருந்து பிற இடங்களுக்குச் செல்ல 3,790 பேருந்துகள் என மொத்தம் 13,152 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டுப் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரு இணையதளங்கள் வழியாக ஆன்லைன் முன்பதிவு செய்யலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10, தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 1 மையம் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.
ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் கட்டுப்படுத்த, புகார்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வழியில்லை.
கோயம்பேடு மற்றும் 4 பேருந்து நிலையங்களுக்கு, இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகள் இயக்கம், வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்படும்.
சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு தனி வழியும், மற்ற வாகனங்களுக்கு தனி வழியும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளைத் தூய்மையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.