
ஆபாசப்படங்கள் பார்ப்பது நல்லதா, கெட்டதா, அதனால் தீமைகள் ஏற்படுமா, அல்லது அது பாலியல் கல்வியா என்கிற கேள்விகள் பலரிடம் இருக்கின்றன.

ஆபாசப் படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. தங்களுடைய பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப் படங்களில் தீர்வு தேடுபவர்களும் அதிகரிக்கிறார்கள்.

சினிமாவில் 50 பேரை கதாநாயகன் அடித்து நொறுக்குவார். ஆனால், யதார்த்தம் அப்படி கிடையாது. இதைப்போலவே, ஆபாசப்படங்கள் பார்க்கும்போது கிடைக்கிற அதிகமான கிளர்ச்சி, செக்ஸின் மீது வருகிற வெறியூட்டும் தன்மை மனைவியுடன் உறவுகொள்ளும்போது கிடைக்காது.

இதனால், தாம்பத்திய வாழ்க்கைக்கு தான் ஃபிட் இல்லையோ என்கிற தாழ்வு மனப்பான்மை ஆணுக்கு வந்து விடுகிறது. சிலருக்கு, அந்தப் படத்தில் வருகிற பெண்ணுக்கு இருப்பதுபோன்ற உறுப்பின் அளவு என் மனைவிக்கு இல்லையே, அந்த நாயகனுக்கு இருப்பது போன்ற உறுப்பின் அளவு இல்லையே என்ற வருத்தம் வந்து விடுகிறது.

அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து சுய இன்பம் செய்யும் ஆண்களின் இல்வாழ்வில், மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் எண்ணிக்கை இயல்பைவிடக் குறைந்து விடும். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஆபாசப் படத்தால் தீமை நிகழ்வதற்கே மிக அதிகமான வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை, இது ஊறுகாய் அளவில் உங்கள் திருமண வாழ்க்கையில் இடம்பெற்றால் பரவாயில்லை எனலாம்.

ஆனால், அந்த எல்லையில் யாருமே நிற்பதில்லை. அவ்வப்போது பார்ப்பது என ஆரம்பித்து, அடிக்கடி பார்ப்பது எனத் தொடர்ந்து, ஒருகட்டத்தில் ஆபாசப் படங்கள் பார்க்காமல் இருக்க முடியாது என்கிற அளவுக்கு அடிமையாகிறார்கள் என்பதே உண்மை. இதுவொரு மனநோய்.

இன்னும் சிலர், ஆபாசப் படங்கள் பார்ப்பதை ஒருவகையான பாலியல் கல்வி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆபாசப் படங்களுக்கும் பாலியல் கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

ஆபாசப் படங்கள் பாலியல் கல்விக்கு எதிரானவை. பாலியல் கல்வி என்பது, எப்படி உறவு கொள்வது என்று சொல்லித் தருவதில்லை. ஆனால், படித்தவர்கள்கூட அதை இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாலியல் கல்வி, ஆணும் பெண்ணும் பரஸ்பரம் அவர்களுடைய உறுப்புகளையும் உணர்வுகளையும் எப்படி மதிப்பது என்று சொல்லித் தரும். அதை முறையற்ற வழிகளில் அனுபவித்தால் பால்வினை நோய்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

தவிர, வளரிளம் பருவத்தில் ஆரம்பித்து எல்லா வயதில் இருப்பவர்களும் பாலியல் தொடர்பாக தங்களுக்கு எழுகிற சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கான வழி இந்தப் பாலியல் கல்வி.

ஆனால் ஆபாசப் படங்கள், மனநலனில் சிக்கலை ஏற்படுத்துபவை. மேலும், ஆபாசப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தீமை நடக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், போர்னோகிராபி இண்டியூஸ்டு எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (PIED) என்றொரு பிரச்னை வரலாம். எனவே, அவற்றை பார்ப்பதற்கான வாய்ப்பு உங்கள் உள்ளங்கையில் இருந்தாலும் அதைத் தவிர்ப்பதே நல்லது.