புதுடெல்லி: கிழக்கு டெல்லியை சேர்ந்த மணிஷ் என்பவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து டெல்லியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய டெல்லி பாஜ எம்பி பர்வேஷ் வர்மா, ‘‘குறிப்பிட்ட சமூகத்தினரை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும். அவர்களிடம் யாரும் காய்கறி வாங்க வேண்டாம். மீன்கடைகளை அவர்கள் திறந்தால், அதற்கு உரிமம் பெறாத பட்சத்தில் மாநகராட்சியிடம் புகார் கூறி அதை மூட வைக்க வேண்டும்’’ என்றார். இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. ஆனால், இதுதொடர்பாக எம்பி பர்வேஷ் வர்மாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘குற்றம் செய்தவர்களின் குடும்பத்தினர் நடத்தும் உணவகம், கடைகளைதான் புறக்கணிக்க வேண்டும் என்றேன்’’ என கூறி உள்ளார். இந்த நிலையில், அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.