ஜெருசலம்: லெபனானுடன் நீண்ட காலமாக சர்ச்சையாக இருந்த கடல் எல்லை ஒப்பந்தம் முடிவை எட்டியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க கடல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் “வரலாற்றுச் சாதனை” என்றும் இஸ்ரேல் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் யார் லாபிட் பேசும்போது, “லெபனானுடன் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய கடல் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஒப்பந்தம் எட்டியுள்ளது. இஸ்ரேலும் லெபனானும் கடல்சார் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டை எட்டியுள்ளன. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் பாதுகாப்பை அதிகரிக்கும்” என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் லெபனான் தரப்பில் பங்கெடுத்த தலைமை பேச்சுவார்த்தையாளர் எலியாஸ் பௌ சாப் கூறும்போது, “இன்று நாங்கள் இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் ஒரு தீர்வுக்கு வந்திருக்கிறோம்” என்றார்.
லெபனான் கடல் பகுதியை ஆக்கிரமித்து ஈரான் ஆதரவு ஹஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடல் பகுதியில் இஸ்ரேல் உற்பத்தியைத் தொடங்கினால் தாக்குதல் நடத்துவோம் என்று ஹஸ்புல்லா அமைப்பு அச்சுறுத்தி வந்தது. இவ்வாறான நிலையில், இஸ்ரேல் – லெபனான் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.