அதிமுக விஐபிக்கள் சொத்து வாங்க உதவி சர்ச்சையில் சிக்கியவர் சேலம் பத்திரப்பதிவு அலுவலக உதவியாளர் வீட்டில் சோதனை: விஜிலென்ஸ் போலீசார் அதிரடி; முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சேலம்: சேலத்தில் அதிமுக ஆட்சியின்போது விஐபிக்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சேலம் சூரமங்கலம் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக இருப்பவர் காவேரி(58). இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக 200 சதவீதம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு, சேலம் இரும்பாலை கணபதிபாளையத்தில் உள்ள காவேரி வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 9 மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.
கடந்த ஆட்சியில் சேலத்தில் செல்வாக்குடன் வலம் வந்த காவேரி, முக்கிய விஐபிக்களுக்கு முன்னின்று பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதில் அவருக்கு ஏராளமான பணமும் கைமாறியுள்ளது. இதனால், இவரது பெயரில் எவ்வளவு சொத்து உள்ளது? உறவினர்கள் பெயரில் சொத்து வாங்கி உள்ளாரா? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  
காவேரியின் மனைவியின் உறவினர்கள் இளம்பிள்ளையில் உள்ளனர். அங்கும் சேலத்தில் உள்ள மேலும் 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மண்டலத்தை பொறுத்தவரை காவேரியை மீறி உதவியாளர் முதல் டிஐஜிக்கள் வரை யாரும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உள்ளே வர முடியாது என்ற நிலை இருந்தது. சேலத்து விஐபிக்களுக்கு மிகவும் நெருக்கமானவர் காவேரி. இதனால் அவர்கள் சொத்து வாங்கும்போது, அனைத்து வேலைகளையும் காவேரியே முன்னின்று செய்து கொடுப்பார். அவர் பணியாற்றும் அலுவலகத்தில் மாவட்ட பதிவாளராக இருந்தாலும், சார்பதிவாளராக இருந்தாலும் பதிவு பணியை காவேரியிடமே வழங்கி வந்தனர். அதிமுக ஆட்சிகாலத்தில் விவிஐபியாக இருந்தவரின் வீட்டில் சர்வசாதாரணமாக இவரை பார்க்கலாம். எந்த பதிவு அலுவலகத்திலும் உதவியாளருக்கு தனிஅறை இல்லாத நிலையில், சூரமங்கலத்தில் அறை ஒன்றையும் வைத்திருந்தார் காவேரி.

விஐபிக்களுக்கு பத்திரப்பதிவு செய்யும் போது தனி அறையில்தான் காவேரி அமர்ந்திருப்பார். சேலம் மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்ட அதிமுக விஐபிக்கள் இங்கே சொத்து வாங்கும் போதும், பணிகளை காவேரியிடமே ஒப்படைப்பது வழக்கம். இந்த வகையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பலருக்கு காவேரி சொத்துக்களை வாங்கிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும் சர்ச்சையில் காவேரி சிக்கிய நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், அவர் பணியாற்றிய சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில், பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அப்போதைய சார்பதிவாளர் இந்துமதி மற்றும் 3 புரோக்கர்கள் மீது வழக்கு பதிந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.