ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்

ங்கநல்லூர் ஐயப்பன் கோயில், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது.

ஐயப்பன் தானே விரும்பி வந்து அமர்ந்த கோயில் இதுவாகும். சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக் கொடுக்கிறதோ அதே போன்ற வடிவிலேயே இங்கும் ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து, அவர்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் புனிதப் பணியினை செய்து வந்தார் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். நாளடைவில் திருவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் விக்ரகம் ஒன்று செய்ய எண்ணம் கொண்டார். அதன்படி பக்தர்களின் கைங்கரியத்தால் ஐயப்பன் விக்ரகம் செய்யப்பட்டு பல வருடங்களாக குருசாமியின் இல்லத்திலேயே ஐயப்ப பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வந்தன. அந்த ஐயப்பன் விக்ரகத்தை ஒரு கோயில் கட்டி அதில் பிரதிஷ்டை செய்ய அனைவரும் எண்ணினர். முதலில் வேறு பகுதியில் இடம் பார்த்து கோயில் கட்ட ஆரம்பிக்க, என்ன காரணத்தினாலோ அது தொடரமுடியாமல் போனது. உடனே குருசாமி சபரிமலையிலுள்ள மேல்சாந்தியை சந்தித்து விவரம் கூற பிறகு தேவபிரசன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டது.

தேவபிரச்னத்தில் ஐயப்பனே வந்து தாம் கோயில் கொள்ள விரும்பும் இடம் பிருங்கி முனிவர் தவமிருந்த சேத்திரம், அகத்தியர் வலம் வந்த பூமியென்றெல்லாம் கூற, அப்படி பிரச்னத்தின் மூலமாக ஐயப்பன் வந்து அமர்ந்த இடம்தான் நங்கநல்லூர். இந்த தலத்து ஐயப்பன் இங்கு பிரதிஷ்டை ஆவதற்கு முன்னால் சபரிமலைக்கு சென்று பம்பா நதியில் நீராடி பிறகு பதினெட்டு படிகள் ஏறி தன்னையே தரிசனம் செய்து விட்டுதான் இங்கு கருவறையில் அமர்ந்து கொண்டார். சபரிமலை மூலவருக்கு நடைதிறந்திருக்காத நாட்களில் அவர்மீது விபூதி பூசி வைப்பது பழக்கம்.

இந்த தலத்து ஐயப்பன் அங்கு சென்றபோது அவர் மீதும் அந்த விபூதி பூசப்பட்டது. அதுமட்டுமல்ல, சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாட்களின் போது நான் அங்கு இருப்பேன்; நடை சாற்றியிருக்கும் நாட்களில் இங்கு இருப்பேன் என்று தேவபிரசன்னத்திலேயே ஐயப்பன் கூறியிருப்பது இக்கோயிலின் சிறப்பாகும். கார்த்திகை மாதம் முழுவதும் சூரியபகவான் ஐயப்பன் மீது தனது ஒளியை பாய்ச்சி அவரது அருளை பெற்றுச் செல்வது இக்கோயிலின் மேலுமொரு சிறப்பாகும்.

இந்த ஐயப்பனை தரிசித்தால் அந்த சபரிமலை ஐயப்பனையே தரிசித்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.