டாஸ்மாக் விற்பனை நேர குறைப்பு சாத்தியமா? அரசு தரப்பில் விளக்கமளிக்க உத்தரவு

மதுரை: டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க சாத்தியமுள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கமளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள், உயிரிழப்பு ஏற்படுகின்றன. எனவே, தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது.

மதுவின் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு அறிந்திட செய்திடவும், மதுபான விலைப்பட்டியல் வைக்கவும், மதுவில் சேர்த்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட விபரங்களை தமிழில் தெரியபடுத்தவும், விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், திருச்செந்தூர் பள்ளி மற்றும் ஐடிஐ மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது மற்றும் பள்ளி மாணவர்கள் பஸ்சில் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் நீதிபதிகளிடம் வழங்கப்பட்டன.

அப்போது நீதிபதிகள், ‘‘இந்த விவகாரம் பொதுமக்களின் நலன் சார்ந்தது. எனவே, டாஸ்மாக் விற்பனையை முறைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால், எப்படி முறைப்படுத்தலாம் என்பது குறித்த கருத்துக்களை, மனுதாரர் தரப்பில் கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். டாஸ்மாக் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க சாத்தியமுள்ளதா என்பது குறித்து, அரசு தரப்பில்  விளக்கமளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.