தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வருகிற 26-ம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், வரும் 28-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சேலத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும் பால் ரூ.32-ல் இருந்து ரூ.42 ஆகவும், எருமைப்பால் ஒரு லிட்டர் ரூ.41-ல் இருந்து ரூ.51 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பால் நிறுத்த போராட்டம் நடைபெற்றால், நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டம் பால் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.