திருநெல்வேலி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தாலி கட்ட முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு, பாலிடெக்னிக் படிக்கக்கூடிய மாணவன் தாலி கட்டிய வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்திய நிலையில், தற்போது நெல்லையருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தாலி கட்ட முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேரன்மகாதேவி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே பகுதியில் மற்றொரு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மாணவியோ படிக்கின்ற வயதில் படிக்க வேண்டும். இந்த வயதில் இதெல்லாம் கூடாது என்று, மாணவனின் காதலுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவன், சம்பவம் நடந்த அன்று மாணவிக்கு திடீரென தாலி கட்ட முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட மாணவி, கூச்சலிட்டபடி தலைதெறிக்க ஓடி தப்பித்துள்ளார்.

மேலும், மாணவிக்கு துணையாக அக்கம் பக்கத்தினர் வரவே, மாணவன் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், மாணவன் மற்றும் அவரது பெற்றோரை வரவழைத்து, அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.