இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI – Food Safety and Standards Authority of India) உருவாக்கப்பட்ட திட்டம், ‘ரூகோ (RUCO – Repurpose Used Cooking Oil)’ திட்டம். இதில், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றி விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. ’ரூகோ’ திட்டம் தமிழக சட்டமன்றத்தில் அறிவிப்பு எண் 72-ன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டு, உணவு பாதுகாப்புத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் நோக்கம் என்ன?
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை உணவு வணிகர்களிடமிருந்து விலைக்குப் பெற்று, பயோ டீசலாக மாற்றுவது திட்டத்தின் நோக்கம். உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்த அக்ரிகேட்டர்ஸ் (Aggregators), பயோ டீசல் உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு வணிகர்களை இணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமையலில் பொரிப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் அதில் உள்ள அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகமாகிறது. அந்த எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது கெட்ட கொழுப்பு சேர்வது, இதயம் சம்பந்தமான நோய்கள், வயிறு சம்பந்தமான கோளாறுகள் போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பாகிறது. இதை தடுப்பதற்காக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உடன் இணைந்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை இந்த ’ரூகோ’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
திட்டத்தின் செயல்பாடுகள் என்னென்ன?
ஒரு நாளைக்கு 50 லிட்டருக்கு மேல் எண்ணெய் பயன்பாட்டில் உள்ள ஓட்டல்கள், ரெஸ்டாரன்டுகள், இனிப்பு கார வகை தயாரிப்பாளர்கள், கேன்டீன்கள், பேக்கரிகள் போன்ற இடங்களில் இருந்து அந்த எண்ணெய், உணவு பாதுகாப்பு துறையில் அங்கீகாரம் பெற்ற அக்ரிகேட்டர்ஸ் மூலம், தரத்திற்கு ஏற்ப விலைக்கு பெறப்பட்டு, பயோ டீசல் ஆக மாற்ற அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவனிடம் பேசினோம்.
“சேலம் மாவட்டத்தில் இதுவரை 312 உணவு வணிகர்கள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உணவு தயாரிப்பு கூடங்களில் 40 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன்கள் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சேகரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்களும், தாங்கள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை கேன்களில் சேகரித்து வைக்கிறார்கள். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இந்த கேன்கள் அக்ரிகேட்டர்ஸ் மூலம் சேகரிக்கப்பட்டு மொத்தமாக பயோ டீஸலாக மாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் மாதத்திற்கு சுமார் ஏழு முதல் எட்டு டன் வரை ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோ டீசல் ஆக மாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை 46.217 டன்கள் எண்ணெய் சேகரிக்கப்பட்டு 28.903 டன் பயோ டீசலாக மாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தை எதிர்காலத்தில், மெஸ் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் திருமண மண்டபங்களிலும் செயல்படுத்த முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து பள்ளி, கல்லூரிகள் உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காணொளி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

‘ரூகோ’ திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு வணிகர்கள், அங்கீகரிக்கப்பட்ட அக்ரிகேட்டர்ஸ், பயோ டீசல் உற்பத்தியாளர்கள் போன்ற விவரங்களும், சேகரிக்கப்படும் எண்ணெயை மற்றும் பயோ டீசலாக மாற்ற அனுப்பப்பட்ட எண்ணெயின் அளவு போன்ற விவரங்களும் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் செயல்பாடு மூலம், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டு, உடலில் கெட்ட கொழுப்பு சேர்ப்பவர்களின் சதவிகிதமும் குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டம் உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது” என்றார்.