முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. காவல்துறை சட்ட ஒழுங்கை நிலைநாட்டி மக்களுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு ஐ.ஜி வீட்டிலேயே கைவரிசையை காட்டுகிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இதுதான் உதாரணம். அ.ம.மு.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. ஓ.பி.எஸ், சசிகலா உடன் வேண்டுமானால் டி.டி.வி.தினகரன் கூட்டணி வைத்துகொண்டு தேர்தலை சந்திக்கட்டும்.

ஓ.பி.எஸ் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர் என்பதை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. அதனடிப்படையில்தான் சபாநாயகர் செயல்பட வேண்டும். சபாநாயகர் மரபை காக்கின்றவரா, மீறுபவரா, சட்டத்தை மதிப்பவரா, இல்லையா? என்பது வருகின்ற 17-ம் தேதிதான் தெரியும். முறையாகச் செயல்படவில்லையென்றால் அவர் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கின்ற சபாநாயகர் என்ற பெயரைதான் வாங்குவார்.

ஆளுங்கட்சியும் ஓ.பி.எஸ்-ஸும் ஓன்றுதான். அவர்களைப் பிரிக்க முடியாது. ஓ.பி.எஸ்-ஸையும், தி.மு.க-வையும் பிரிக்க முடியாது. சபாநாயகர் இந்த விவகாரத்தில் தி.மு.க-வின் பேச்சைக் கேட்காமல் நடுநிலையோடு இருப்பார் என்று நம்புகிறேன். நாங்களும் இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கியிருக்கிறோம்” என்றார்.