கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பேர் நரபலி விவகாரம்: திடுக்கிடும் தகவல்களால் அதிர்ச்சி.! சிறப்பு போலீஸ் படை விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு போலீஸ் படையினர் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், கொச்சியில் மாயமான பெண்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லி ஆகிய 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட முகம்மது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகிய 3 பேரும் நேற்று எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நரபலி தொடர்பான விசாரணையில் இதுவரை கிடைத்த தகவல்கள் குறித்து கொச்சி நகர போலீஸ் கமிஷனர் நாகராஜு நிருபர்களிடம் கூறியது: ரோஸ்லிக்கு ₹10 லட்சம் தருவதாகவும் பத்மாவுக்கு ₹15,000 தருவதாகவும் ஆசை காட்டித் தான் பகவல் சிங்கின் வீட்டுக்கு ஷாபி அழைத்துச் சென்று இருக்கிறார்.

ரோஸ்லியை ஆபாச படத்தில் நடிப்பதற்கு என்றும், பத்மாவிடம் உல்லாசத்திற்கு என்றும் கூறி அழைத்து உள்ளார். ரோஸ்லியை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டி போட்டு உள்ளனர். பிறகு அவரது கழுத்தை ஷாபி நெரித்துள்ளார். அந்த சமயம் வரை ஆபாசப் படம் எடுப்பதற்காகத் தான் அவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர் என்று ரோஸ்லி கருதினார். இதன் பிறகு 3 பேரும் சேர்ந்து மிக கொடூரமான முறையில் ரோஸ்லியை கொன்று உள்ளனர். ரோஸ்லியின் கழுத்தை லைலா அறுத்துள்ளார். இதன் பின்னர் ஷாபி அவரது பிறப்புறுப்பில் கத்தியால் பலமாக குத்தி உள்ளார். தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். இதே பாணியில் தான் பத்மாவையும் மிக கொடூரமாக 3 பேரும் சேர்ந்து கொலை செய்தனர். இதன் பின்னர் உடல் பாகங்களில் உப்பை தூவி ஒரு வாளியில் போட்டு ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் போட்டு மூடி உள்ளனர்.

ரத்தத்தை அறை முழுவதும் தெளித்து பூஜை செய்தனர். அன்றைய தினம் மாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடையே தான் இந்த 2 கொலைகளும் நடந்து உள்ளன. துண்டுகளாக்கப்பட்ட உடல் பாகங்களை இரவு 10 மணிக்கு பின்னர் குழியில் போட்டு மூடி உள்ளனர். உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதாக லைலா விசாரணையின்போது கூறினார். ஆனால் அது உண்மைதானா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஷாபி ஒரு கொடும் சைக்கோ ஆவார். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். இவர் மீது இதற்கு முன்பு 75 வயது மூதாட்டியை சித்திரவதை செய்து பலாத்காரம் செய்த வழக்கு உட்பட 8 கிரிமினல் வழக்குகள் உள்ளன. கொச்சி புத்தன்குருசு பகுதியை சேர்ந்த மூதாட்டியை மிகக் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளார். அவரது உடலில் கத்தியால் பல இடங்களில் குத்திக் கிழித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த மூதாட்டி பல மாத சிகிச்சைக்குப் பின் தான் உடல் நலம் தேறினார். இந்த கொடூர செயலையும் மந்திரவாதத்திற்காக ஷாபி செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 16 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய இவர், ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார். லாரி டிரைவர், மெக்கானிக், மீன் வியாபாரம், ஓட்டல் என்று பல தொழில்களில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலப் படங்களில் நாம் பார்ப்பதை விட கொடும் சைக்கோவான இவர், பெண்களின் உடல்களில் கத்தியால் குத்தி உடலில் இருந்து ரத்தம் பீய்ச்சியடிப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக பெண்களின் மர்ம உறுப்புகளில் கத்தியால் குத்தி ரசிப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். குடி போதைக்கு அடிமையான இவருக்கு பெண்களிடம் உல்லாசம் அனுபவிப்பது தான் பிடித்த பொழுதுபோக்காகும். கஞ்சா கடத்தலும் செய்து வந்தார். வெறும் 6ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஷாபி, பல வருடங்களாக பேஸ்புக் பயன்படுத்தி வந்துள்ளார். தேவி என்ற பெண்ணின் பெயரில் போலி கணக்கை தொடங்கி அதன் மூலம் பலருக்கு வலை விரித்துள்ளார். பூஜை செய்தால் செல்வம் சேரும் என்று கூறி தனது பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். சிலருக்கு தேவி என்ற பெயரில் இவர் காதல் வலையும் விரித்துள்ளார். அந்த வலையில் தான் பகவல் சிங்கும் சிக்கினார். ஸ்ரீதேவியை கடைசி வரை காதலித்த பகவல் சிங், போலீஸ் வந்து கூறும் வரை அந்த தேவி தான் முகம்மது ஷாபி என்ற விவரம் அவருக்குத் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.