“சட்டப்பிரிவு 66A-ன் கீழ் இனி வழக்கு பதிவு கூடாது..!" – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?

தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66 A-ன் கீழ் கணினி, தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக மற்றவர்களை தாக்கிப் பேசுவது, அச்சுறுத்தும் பதிவுகள், பொய்யான தகவலை பதிவிடுவது இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். அதை மீறுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறிப்பிட்ட தொகை அபராதமாகவும் விதிக்கப்படும்.

கடந்த 2015-ம் ஆண்டு இந்தப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. காரணம், நாட்டின் பாதுகாப்பையோ அல்லது சமூகத்தின் அமைதியை சீர்குலைக்காத தனிநபரின் கருத்து எப்படி தவறாகவும், மேலும் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யும் சட்டப்பிரிவு 19-க்கு எதிராக இருப்பதாகக் கூறி இது நீக்கப்பட்டது.

குறிப்பாக, இந்தச் சட்டப்பிரிவின் கீழ் பல மாணவர்கள்கள் கைதுசெய்யப்படுவதாகவும் , இது மக்களின் குரலை ஒடுக்க பயன்படுவதாக சட்டக்கல்வி மாணவி ஒருவர் தொடரப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பேச்சுரிமை

ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தற்போதும் வழக்கு பதியப்படுவதாக தான்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, “தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவைக் கொண்டு இனி எந்த புகாரையோ… கைது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது” எனத் தீர்ப்பு வழங்கியது. மேலும், “இதை அனைத்து மாநிலங்களிலுள்ள தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பி-க்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல, தற்போது இதன்கீழ் போட்டப்பட்ட அனைத்து வழக்குகளும் மூன்று வாரங்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்” என அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டது.

ஜெயராம் வெங்கடேசன்

இது குறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், “அரசு கொண்டு வரும் திட்டத்திற்கும் அதன் கொள்கையின்மீதும் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அதை வெளிப்படுத்தவே இது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டதே அன்றி… அரசுக்கு ஆதரவான கருத்தை வெளிப்படுத்த சட்ட உரிமைகள் தேவையில்லை.

பல சமயங்களில் சட்டப்பிரிவு 66-A தவறாகப் பயன்படுத்தப்படுவதால்தான் இந்தப் பிரிவை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்த ஒரு நடவடிக்கை, பேச்சுரிமைக்கு எதிரான செயல்பாடுகளை முற்றுலுமாக குறைக்காது. எனினும், காவல்துறையால் தவறாகப் பயன்படுத்துவது குறைய வாய்ப்பிருக்கிறது. இந்தச் சட்டப்பிரிவை அமல்படுத்துவதற்கு முன்பாகவும் காவல்துறை சார்பாக பொய் வழக்குகள் போடப்பட்டன. அதன்பிறகு, கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்பிரிவால், தனிநபர்கள்மீது அவர்கள் நடத்தப்படும் சட்ட தாக்குதல் இன்னும் எளிமையானது.

உரிமைகள்

கருத்துரிமை என்றால் என்ன என்பதை காவல்துறையினருக்குப் புரிய வைக்க வேண்டும். மேலும், அடிப்படை உரிமைகளை நசுக்கும் இதுபோன்ற தடை சட்டங்களை பயன்படுத்துவதை காவல்துறையினர் கைவிட வேண்டும். அதையும் மீறி இந்த வழக்குகளை பதியும்போது அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை மதிக்காத தனிநபர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது போல காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுப்பதை அரசும் நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

இந்திய அரசியல் சட்டம்

இந்தத் தீர்ப்பு தொடர்பாக வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசியபோது, “சட்டப்பிரிவு 66A-கீழ் வழக்கு பதிவுசெய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் 2015-ம் ஆண்டு அறிவித்தது என்னவோ உண்மைதான். ஆனால், தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவுக்கு மாற்றாக சில துணைப் பிரிவுகளின் கீழ் காவல்துறையால் வழக்குகள் பதியப்படுகின்றன.

உதாரணத்துக்கு… அரசின் திட்டம் குறித்து கருத்தைப் பதிவிடும் நபர்மீது சட்டப்பிரிவு 66-A பயன்படுத்துவதற்குப் பதிலாக சட்டப்பிரிவு 153(A)-ன் கீழ் `கலவரத்தை தூண்ட முயற்சி’ என்னும் அடிப்படையில் வழக்கு பதியப்படும். இப்படி ஒரு சட்டம் மறுக்கும் வாய்பினை, பிற சட்டங்கள் வழியாக காவல்துறையினர் பெற்றுக்கொள்கின்றனர்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.