உத்தரகாண்ட் மாநிலத்தில், சுரங்க மாஃபியாவைச் சேர்ந்த குற்றவாளியை, போலீஸார் பிடிக்கப்போன இடத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர் பா.ஜ.க தலைவரின் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. முதலில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று, சுரங்க மாஃபியாவான ஜாஃபர் என்பவரைக் கைதுசெய்யத் தேடலில் ஈடுபட்டிருக்கிறது. பின்னர் அந்த நபர் உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரத்பூர் கிராமத்தில், பா.ஜ.க தலைவர் குர்தாஜ் புல்லரின் வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்படி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மொராதாபாத் மாவட்ட போலீஸ் அங்கு விரைந்திருக்கின்றனர்.
அப்போது குர்தாஜ் புல்லரின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது இருதரப்பினருக்குமிடையே மோதல் நடைபெற்றிருக்கிறது. பின்னர் இந்த மோதல் கொஞ்ச நேரத்தில் துப்பாக்கிச்சூடாக மாறியது. அந்த சமயத்தில், வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குர்தாஜ் புல்லரின் மனைவி, எதிர்பாராத விதமாகத் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதில் உத்தரப்பிரதேச போலீஸார் 4 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, ஆத்திரமடைந்த கிராம மாக்கள் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், காஷிபூர் எம்.எல்.ஏ திரிலோக் சிங் சீமா, கதர்பூர் எம்.எல்.ஏ அரவிந்த் பாண்டேவும் கிராம மக்களுடன் இணைந்தனர். அதன்பின்னர், போலீஸாரின் வற்புறுத்தலின் பேரில் கிராம மக்களின் மறியல் கைவிடப்பட்டது.
அதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய உத்தம் சிங் நகர் மாவட்ட எஸ்எஸ்பி மஞ்சுநாத், “உத்தரப்பிரதேச போலீஸ் குழு தங்களின் இந்த நடவடிக்கை குறித்து உத்தரகாண்ட் போலீஸுக்கு முன்கூட்டியே எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார். மேலும், இது தொடர்பாக உத்தரப்பிரதேச போலீஸ்மீது வழக்கு பதிவுசெய்திருப்பதாகவும் உத்தரகாண்ட் போலீஸ் தெரிவித்திருக்கிறது.