சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளம்பெண் முருகன் என்ற இளைஞரின் ஒருதலைக் காதல் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தின் நினை வலைகள் இன்னும் நீங்காத நிலையில், அவ்வப்போது மேலும் நிகழ்வுகள் சென்னையில் அரங்கேறி உள்ளது.
இந்த நிலையில், சென்னை பரங்கிமலை (மவுண்ட்) ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் வந்துகொண்டிருந்த ரயில் முன் தள்ளி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலை செய்த நபர் யார் என விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட மாணவி தனியார் கல்லூரியில் படிக்கும் சத்யா (20) என்பது தெரிய வந்துள்ளது. அவரை ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞர், ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வாய்த்தகராறு அதிகரித்த நிலையில், அந்த இளம்பெண்ணை இளைஞர் பரங்கிமலை ரயில் நிலையம் வந்துகொண்டிருந்த ரயின் முன்பு தள்ளி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடினார். இந்த விபத்தில், தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சதீஷ்-ஐ தேடி வருகின்றனர்.