சேலம் மாநகர டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபகாலமாக புகார் அளிக்க வருபவர்களிடம் பணம் பெருமளவு வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காதல் திருமண ஜோடி ஒன்று தஞ்சம் அடைந்தது. அந்த காதல் ஜோடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ரூ.25,000 பணத்தை, எஸ்.ஐ மேனகா, சிறப்பு எஸ்.ஐ சுமதி, ஏட்டு அம்சவள்ளி ஆகிய 3 பெண் காவலர்கள் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் காதல் திருமணம் தொடர்பாக புகார்கள் வந்தால் அதனை இன்ஸ்பெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே, இவர்களே புகாரை வாங்கிக் கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் மூன்று பெண் காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை துணை கமிஷனர் லாவண்யா பிறப்பித்துள்ளார். மேலும் இது தொடர்பாக, விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் ஒரே காவல் நிலையத்தில் மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.