“நயன்தாரா- விக்னேஷ் சிவன் விஷயத்தில் நடந்தது இதுதான்; சர்ச்சைகளுக்கு முடிவு?!"-வழக்கறிஞர் விளக்கம்

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக்குழந்தைகளுக்குப் பெற்றோரான தகவல்தான், சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்

`கல்யாணமாகி நாலு மாசம்தானே ஆகுது…’, `எந்த முறையில குழந்தை பெத்திருப்பாங்க?’, `வாடகைத்தாய் முறையாதான் இருக்கும்…’, `சில மாசமா வெளிநாடுகளுக்கு அடிக்கடி போனாங்க. ஒருவேளை அங்கிருந்துதான் குழந்தை வந்திருக்கும்…’, `சட்டவிதிகளை மீறிட்டாங்க…’ – இதுபோன்று பலரின் சிந்தனையில் உதிக்கும் பலதரப்பட்ட கேள்விகளும், ஊர்ஜிதப்படுத்தாத வதந்திகளும், மற்றவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நமக்கிருக்கும் தேவையற்ற அக்கறை நியாயம்தானா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வைக்கிறது.

ஒருவரின் அந்தரங்கத்தில் தலையிட சம்மந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவருக்கே அனுமதி கிடையாது. அப்போது நாமெல்லாம் எம்மாத்திரம்? விக்னேஷ் சிவனின் தற்போதைய பதிவுக்கு வாழ்த்துகள் சொல்வதுடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம் அல்லது அந்த விஷயத்தை எளிதாகக் கடந்து போயிருக்கலாம். ஆனால், அந்த விஷயத்தைப் பூதாகரமாக மாற்றி, முக்கியமான இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மனவருத்தங்களையும் சங்கடங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி யோசிக்காமலும், எவ்வித சலனமும் இன்றி அந்தச் செயலைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா

எப்படித்தான் புரியவைத்தாலும் இந்த விஷயத்தில் பலருக்கான சந்தேகங்களும் போலியான `சமூக அக்கறையும்’ முடிவுக்கு வராது. எனவே, பலருக்கும் இருக்கக்கூடிய கேள்விகளுக்கான விளக்கங்களை அறிய, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷிடம் பேசினோம்.

“வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது புதிதான, ஆச்சர்யமான விஷயம் கிடையாது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த முறையில் குழந்தை பெற்றுள்ளனர். நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் என்பதால் மட்டுமே இப்போது இந்த விஷயம் பெரிதாக கவனம் பெற்றிருக்கிறது. நாங்கள் இந்த முறையில்தான் குழந்தை பெற்றோம் என சம்மந்தப்பட்டவர்கள் இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை. அதுகுறித்து அவர்கள் பிறருக்குச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ்

அப்படியிருக்கும்போது, ‘அப்படியா… இப்படியா…’ என பேசுவதே அபத்தம்தான். கவலைப்படவும், நியாயமான அக்கறை காட்டவும் எத்தனையோ நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இப்படியெல்லாம் விவாதிப்பது வருத்தத்துக்குரியது” என்று பொதுப்படையான கருத்தைச் சொன்னவர், பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.

“ஒருவேளை வாடகைத்தாய் முறை மூலமாகவே நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றிருந்தாலும்கூட, எந்த விதத்தில் அது சட்ட விதிமீறலாகும்?”

விக்னேஷ் சிவன் – நயன்தாரா

“அவர்கள் எந்த விதத்திலும் சட்டவிதிகளை மீறவில்லை. தற்போது நடைமுறையிலிருக்கும் வாடகைத்தாய் முறைப்படுத்துதல் சட்டமே அவர்களுக்குப் பொருந்தாது. ‘வாடகைத்தாய் முறைப்படுத்துதல் சட்டம்’ கடந்த டிசம்பர் மாதம்தான் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது. அது ஜனவரி மாதம்தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அதற்கு முன்பே, குழந்தை பெறுவதற்கான நடைமுறையைச் சம்மந்தப்பட்டவர்கள் தொடங்கியிருப்பார்கள். எனவே, இந்தச் சட்டம் அவர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது”.

“வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற, தம்பதியில் ஒருவர் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமலும், திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளும் ஆகியிருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படுகிறதே…”

குழந்தை

“நடிகை நயன்தாரா விஷயத்தில், ‘திருமணமாகி நான்கு மாதங்கள்தானே ஆகின்றன… கணவன் – மனைவியாக இல்லாதபோதே இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்திருந்தாலும் தவறுதானே…’ இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள். ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதும், குழந்தை பெற்றுக்கொள்வதும் சட்டத்துக்கு எதிரானது அல்ல. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமானால், நடிகர் கமல்ஹாசனும் நடிகை சரிகாவும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டனர் என்பது செய்தி. அது உண்மை என்றாலும் அதிலும் எந்தத் தவறும் இல்லை என்கிறது சட்டம்.

வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறுவது தொடர்பாக, 2005-ல் மத்திய அரசினால் வழிகாட்டு நெறிமுறைகள் மட்டுமே வெளியிடப்பட்டன. எந்த விதிமுறைகளும் அப்போது கூறப்படவில்லை. அதேபோல, வாடகைத்தாய் முறைப்படுத்துதல் சட்டத்தின் முன்வடிவில் ‘தம்பதிகளுக்கான ஐந்தாண்டுகள் காத்திருப்பு காலம்’ குறித்த தகவல் இருந்தது. ஆனால், தற்போது நடைமுறையிலிருக்கும் புதிய சட்டத்தில் ‘காத்திருப்பு காலம்’ குறித்த எந்த வரையறையும் கூறப்படவில்லை. நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம்தான் நடைமுறைக்குப் பொருந்தும்.”

“வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன?”

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற சினிமா பிரபலங்கள்

“பதிவு செய்த மருத்துவமனையில்தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த மருத்துவமனையில் வாடகைத்தாய் முறை குறித்த விளம்பரங்களைச் செய்யக் கூடாது. திருமணாகி, ஏற்கெனவே ஒரு குழந்தையாவது பெற்ற பெண், வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும். அவருக்கு வியாபார நோக்கில் பணமோ அல்லது பிற வழியில் பெரிய ஆதாயமோ கிடைக்கக் கூடாது. கருவைச் சுமக்க ஆரம்பித்ததிலிருந்து அடுத்த 36 மாதங்களுக்கு வாடகைத்தாய்க்கான மருத்துவக் காப்பீடு உறுதிசெய்யப்பட வேண்டும்.

சம்மந்தப்பட்ட பெற்றோரும் வாடகைத்தாயும் ஒருசேர இணைந்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, நன்கு விவாதித்து, சரியான புரிந்துணர்வுடன்தான் இந்த நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். எனவே, இந்த இரண்டு தரப்புக்கும் நேரடியாக எந்தத் தொடர்புகளும் இருக்காது, இருக்கக்கூடாது என சொல்லப்படுவதும் உண்மையில்லை. வாடகையைத்தாயாக இருப்பவர் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு உறவினராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.”

“இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள இருவருக்குமே வாய்ப்பு இருந்தும், ஒரு தம்பதி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்தானே… அதற்கு அனுமதி கிடைக்குமா?”

வாடகைத்தாய்

“இப்போதைய சூழலில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறைக்காக, ‘Appropriate authority’ என்ற மத்திய அரசின் குழு எல்லா மாநிலங்களிலும் செயல்படுகிறது. இந்த முறையில் குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் மற்றும் வாடகைத்தாய் ஆகியோர் அந்தக் குழுவின் முன்பு விளக்கம் தந்து, அதை அந்தக் குழு ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். வாடகைத்தாயாக இருக்கும் பெண்களை வியாபாரரீதியாகப் பயன்படுத்தும்போக்கு அதிகரித்து, இந்த முறையின் நோக்கம் திசைமாறிவருகிறது. இதனை நடைமுறைப்படுத்தவே, பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முறையில் மருத்துவ வல்லுநர்களின் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படும். பிறகு, தம்பதிகளின் கோரிக்கையைப் பொறுத்து, சம்மந்தப்பட்ட குழுதான் இறுதிமுடிவு எடுக்க வேண்டும்.”

“இந்த விஷயத்தில் விதிகளை மீறினால் என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்?”

வாடகைத்தாய்

“வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். சட்டவிதிகளை மீறிய தம்பதிகள், வாடகைத்தாய், மருத்துவமனை நிர்வாகம் போன்ற தரப்பினருக்கு அதிகபட்சமாகப் பத்து ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.”

“நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி, வெளிநாட்டைச் சேர்ந்த வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றதாகவும் பேசப்படுகிறதே…”

“இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கோ அல்லது மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கோ பாஸ்போர்ட் இன்றி ஒருவர் சென்று வருவது இயலாத காரியம். அது பச்சிளம் குழந்தைக்கும் பொருந்தும். பச்சிளம் குழந்தைகளுக்குப் பிறப்புக்கான ஆவணங்கள், பாஸ்போர்ட் எடுப்பது போன்றவை எடுத்த காரியத்திலேயே செய்து முடிப்பது சாத்தியமில்லாதது. அந்த வகையில் வெளிநாட்டிலிருந்து குழந்தையைக் கொண்டு வந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். சம்மந்தப்பட்டவர்கள் சொல்லாதவரை எது பேசினாலும் அது அனுமானமாகத்தான் இருக்கும்.”

“திருமணம் ஆகாதவர், சிங்கிள் பேரன்ட், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு முறையில் இருப்பவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறலாமா?”

வாடகைத்தாய்

“தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், தற்போது அமலில் இருக்கும் புதிய சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. பல தரப்பினரும் அந்தச் சட்டத்தில் விடுபட்டுள்ளனர். திருமணமாகி கணவருடன் வசிக்கும் பெண்கள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் வாடகைத்தாயாக இருக்கலாம் என்றுதான் இப்போதைய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. திருமணமாகாத பெண்கள், திருமணம் செய்து கொள்ளாமல் ஓர் ஆணுடன் உறவு முறையில் இருக்கும் பெண்கள், தன்பால் ஈர்ப்பாளராக இருக்கும் பெண்கள் வாடகைத்தாயாக இருப்பது குறித்து சட்டத்தில் விளக்கம் தரப்படவில்லை” என்றவர், இறுதியாக…

“வாடகைத்தாய் முறை, குழந்தையின்மைக்கான தீர்வாக அமையாது. சம்மந்தப்பட்ட தம்பதிகள், வாடகைத்தாயாக இருப்பவர்களின் தனிப்பட்ட விருப்பம், தேவையைப் பொறுத்துதான் இதற்கான தேவை உருவாகிறது. வாடகைத்தாய் முறையைப் பற்றியும், இந்த முறையில் குழந்தையைப் பெற்றுக்கொள்பவர்களைப் பற்றியும் பொதுவெளியில் உண்மைக்கு மாறான, உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் பேசுவது நல்லதுமல்ல, நாகரிகமானதும் அல்ல. மலர்கின்ற பூவைப்போல ‘வாடகைத்தாய் முறைப்படுத்துதல் சட்டம்‘ இப்போதுதான் இந்தியாவில் அமலாகியிருக்கிறது. வருங்காலத்தில்தான் இந்தச் சட்டத்தின் செயல்பாடு, சிக்கல்கள், தேவைப்படும் மாறுதல்கள், தளர்வுகள் குறித்தெல்லாம் விவாதிக்கப்படும்” என்று முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.