பெங்களூரு: உலகம் போற்றும் தலைவரான பிரதமர் மோடியை அரசியலில் குழந்தையான ராகுல் காந்தி விமர்சிப்பதா என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். அவரது இந்த பயணம் கன்னியாகுமரி, கேரளா, வழியாக கடந்த 30ம் தேதி கர்நாடகாவை அடைந்தது. கடந்த 12-வது நாளாக கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு போட்டியாக கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் நேற்று முதல் ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து மாநிலம் முழுவதும் மக்களை சந்திக்கும் ஜன்சங்கல்ப் யாத்திரையை தொடங்கினர்.
இந்நிலையில் ராய்ச்சூர் நகரில் ஜன்சங்கல்ப் யாத்திரையை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசிய எடியூரப்பா; மோடி பிரபஞ்சம் போற்றும் நாயகனாக உள்ளார். அவரை பற்றி குழந்தை ராகுல் காந்தி பேசுவதாக? என்று கடுமையாக விமர்சித்துள்ளார். எடியூரப்பாவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முதலில் கோழை நரேந்திர மோடி, பத்திரிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்; ஜன்சங்கல்ப் யாத்திரை என்ற பெயரில் கார் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் செல்லாமல் சாலையில் இறங்கி கீழே விழாமல் தங்களால் 4 கி.மீ நடந்து செல்ல முடியுமா என்றும் பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பசவராஜ் பொம்மை கட்சிக்கு தலைமைக்கு தவணை செலுத்தி வருவதால் பதவியில் பாதுகாப்பாக இருப்பதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.