பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-தாய்லாந்து இன்று மோதல்

சில்ஹெட்,

8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 பு]ள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின.

இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் காலை 8.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான இந்தியா, கத்துக்குட்டி அணியான தாய்லாந்தை எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் தாய்லாந்தை 15.1 ஓவர்களில் வெறும் 37 ரன்னில் சுருட்டிய இந்திய வீராங்கனைகள், மறுபடியும் போட்டு தாக்குவதை எதிர்நோக்கி உள்ளனர். லேசான காயம் காரணமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கடந்த 3 ஆட்டங்களில் ஆடவில்லை. இதனால் ஸ்மிர்தி மந்தனா கேப்டனாக செயல்பட்டார். அத்துடன் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் சில பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஹர்மன்பிரீத் கவுர் வருவாரா?

அந்த வகையில் தாய்லாந்து சிறிய அணி என்பதால் பேட்டிங்கில் சோதனை முயற்சி தொடருமா அல்லது ஹர்மன்பிரீத் கவுர் களம் திரும்புவாரா என்பது போட்டிக்கு முன்பாகத் தான் தெரிய வரும். நருமோல் சாய்வால் தலைமையிலான தாய்லாந்து முதல் முறையாக அரைஇறுதிக்குள் கால்பதித்து வரலாறு படைத்துள்ளது. முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள முனைப்புடன் உள்ளனர். ஆனாலும் பலம் வாய்ந்த இந்தியாவுக்கு எதிராக தாக்குப்பிடிப்பது கடினம் தான்.

பிற்பகல் 1 மணிக்கு நடக்கும் மற்றொரு அரைஇறுதியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடைசி லீக்கில் பாகிஸ்தானிடம் உதை வாங்கிய இலங்கை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் காத்திருக்கிறது.

இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இங்கு இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் மழை பெய்வதற்கு 30 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.