புதுடில்லி :பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 2.69 கோடி ரூபாய் பணத்தை, பத்திரிகையாளர் ரானா அயூப் தன் சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ரானா அயூப், ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக, 2020 ஏப்., முதல் மூன்று நிதி திரட்டும் பிரசாரங்களை மேற்கொண்டார். ‘கீட்டோ’ எனப்படும், நிதி திரட்டும் இணையதளம் வாயிலாக இந்த பணியை மேற்கொண்டார்.
இதில் திரட்டப்படும் பணம், குடிசை பகுதியில் வாழும் மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு செலவிடப்படும் என்றும், அசாம், பீஹார், மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கு செலவிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த பிரசாரங்களில், 2 கோடியே 69 லட்சத்து 44 ஆயிரத்து 680 கோடி ரூபாய் வசூலானது.
இந்த பணத்தை, ரானா ஆயூப் தன் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக உ.பி.,யின் காஜியாபாத் போலீசார் கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்தது. இதில், வசூலான நிதி, ரானா அயூபின் தந்தை மற்றும் சகோதரியின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு, அதில் இருந்து ரானாவின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.
நிவாரண பணிகளுக்கு 29 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதும் தெரிய வந்தது.
பலர் வெளிநாட்டில் இருந்து நன்கொடை அளித்துள்ளனர். இதற்கும் முறையான அனுமதி பெறப்படவில்லை.இதையடுத்து பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், ரானா அயூப் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் காஜியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், பத்திரிகையாளர்ரானா அயூப், மக்களை ஏமாற்றி பணம் பறித்து, அதை தன் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாகவும், வெளிநாட்டு நன்கொடை சட்டத்தை மீறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement