மதுரையில் மழை பாதிப்புகள்; ஸ்டாலினுக்கு அட்வைஸ் பண்ண ஆர்.பி.உதயகுமார்!

மதுரையில் 3 நாட்களாக கனமழை பெய்ததன் காரணமாக மாட்டுத்தாவணி அருகே பாசன வாய்க்கால்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. இதனால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்தன. இவற்றை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மழை நீரால் பாதிக்கப்பட்ட பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யும் 50க்கும் மேற்பட்ட வட மாநில மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், கழக இடைக்கால பொதுச் செயலாளர், மதுரையில் 3 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் குண்டு குழியுமாக உள்ளன. மாட்டுத்தாவணி அருகே டி.எம்.நகர் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏறத்தாழ 600 குடியிருப்புகள் பாதிப்பு அடைந்துள்ளன. இவ்வாறு தண்ணீர் சூழ்ந்து சிரமம் ஏற்படுத்தும் போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட வேண்டும்.

முன்னதாக வடகிழக்கு பருவ மழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் அமைக்கவில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பலர் வெளியேறும் சூழ்நிலை உள்ளது. அமைச்சர்கள் பார்வையிட்டு சென்றாலும் குறிப்பாக 3 நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருந்து வருவதால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் உணவு தயாரித்துக் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்கும் வசதி, மருத்துவ வசதியுடன் கூடிய நிவாரண முகாம்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். உத்தங்குடி போன்ற பகுதிகளிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே தேவையான மணல் மூட்டைகளை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு தகவல்களை கூறி வருகிறார்.

ஆனால் அவர் கூறிய தகவலுக்கும், களத்தில் உள்ள நிலவரத்திற்கும் வேறுபாடு உள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் மழை வடிகால் இணைப்புகள் முடிவு பெறாமல் உள்ளன. பணிகளை 10 நாட்களில் முடிப்போம் என்று கூறினார்கள். கள நிலவரத்தில் வேறுபாடு உள்ளது. ஒரு மணி நேர மழைக்கே சென்னை தாங்கவில்லை.

சென்னையில் முழுமையான நீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் முழுமை பெறவில்லை. எடப்பாடியார் ஆட்சியில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள 22,558 ஏரிகள், 12,070 நீர் வழித்தடங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. 7,030 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டன.

குறிப்பாக 9,627 பாலங்கள்,1,37,074 சிறு பாலங்கள் சுத்தம் செய்யப்பட்டன. இதன் மூலம் கிராமப்புறங்களில் நீர் செல்லாத வண்ணம் பாதுகாக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தான் கஜா புயல் போன்ற சமயங்களில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் தடுக்கப்பட்டது. தமிழக அரசு கடந்த ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் எந்த உயிர் இல்லாமலும் பொருட்சேதம் இல்லாமலும் மக்களை காப்பாற்றலாம் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.