சென்னை: பருவமழையால் பாதிக்கப்படாத வகையில், 11 லட்சம் டன் நெல்லை சேமிக்க கிடங்குகள் தயார் நிலையில் உள்ளதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களிடம் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று கூறியதாவது: மத்திய அரசு அனுமதியுடன் தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 1,436 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் 3.60 லட்சம் டன் உட்பட தமிழகத்தில் 4.88 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இதுவரை ரூ.754 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நெல் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வர் அறிவுறுத்தலின்படி, தமிழகஉணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வரும் 19-ம் தேதி டெல்லிசென்று இதுகுறித்து மத்திய செயலரிடம் வலியுறுத்த உள்ளார். தஞ்சை, தேனி, மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் தனியார் பங்களிப்புடன் 6,500 டன் திறனுள்ள புதிய நவீன நெல் அரவை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 லட்சம் டன் நெல் சேமிக்கும் வகையில் 20 இடங்களில் ரூ.238 கோடியில் குறுகிய அளவிலான சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட உள்ளது. பருவமழையால் பாதிக்கப்படாத வகையில்,11 லட்சம் டன் நெல்லை சேமிக்க கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன.