மாணவர் பாராளுமன்றங்களில் இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையை உருவாக்க இலங்கை பாராளுமன்றம் ஆதரவு

நாடு முழுவதிலும் நடைமுறையில் உள்ள மாணவர் பாராளுமன்றங்களில் இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையை உருவாக்க இலங்கைப் பாராளுமன்றம் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கான ஆரம்பமாக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியொன்று இலங்கை பாராளுமன்றத்தினால் அண்மையில் எஹலியகொட தேசிய பாடசாலை மாணவர் பாராளுமன்றத்தில்  இலத்திரனியல் வாக்களிப்பு முறையைப் பயன்படுத்துவது தொடர்பில் நடத்தப்பட்டது.

“மாணவர் பாராளுமன்றதில் இலத்திரனியல் வாக்குப்பதிவுக்கு உதவி”  என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்றத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், இதில் மாணவ மாணவியர் மற்றும்  ஆசிரியர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

வாக்குகளைத் தெரிவிப்பதற்கு இலத்திரனியல் பொறிமுறையொன்றைப் பயன்படுத்துவதன் ஊடாக வாக்குச்சீட்டை அச்சடிப்பது மற்றும் வாக்குப்பெட்டி போன்றவற்றுக்காக மேற்கொள்ளப்படும் செலவு மற்றும் வாக்கு எண்ணுவதற்காக எடுக்கப்படும்  நேரம், காலத்தையும் குறைக்க முடியும் என்பது நவீன தேர்தல்முறை நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாடாகும்.

வாக்காளர்களைப் பதிவுசெய்வது முதல், வாக்களிப்பு தினத்தில் வாக்குகளைப் பதிவுசெய்து இறுதி முடிவை அறிவிக்கும் வரையிலுள்ள ஒவ்வொரு கட்டத்திலும் எந்தத் தவறுமின்றி இந்த இலத்திரனியல் வாக்குப்பதிவுப் பணிகளை பிழையின்றி பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்துப் பாராளுமன்ற உயர்மட்ட அதிகாரிகள் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள எஹலியகொட தேசிய பாடசாலையானது இவ்வருடம் தமது மாணவர் பாராளுமன்றத் தேர்தலுக்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறையைப் பயன்படுத்தியுள்ளமை மிகவும் நம்பிக்கையான போக்கு எனப் பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

ஒன்லைன் முறையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இலங்கைப் பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் மகேஷ் பெரேரா மற்றும் குறித்த திணைக்களத்தின் அதிகாரிகளான நரேந்திர லக்மால் மற்றும் சமிந்த வில்லோ ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைவிடவும் இலங்கை பாராளுமன்றத்தின் இணைப்புப் பொறியியலாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் லலித் அதிகாரி பாராளுமன்றத்தின் இலத்திரனியல் வாக்குப்பதிவு தொடர்பான அனுபவத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். பாராளுமன்றத்தின் சட்டவாக்கம் மற்றும் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனகாந்த சில்வா எஹலியகொட மாணவர் பாராளுமன்றத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.