“அடிமையாக இருக்காதீர்கள்; தேசத்துரோகியை நீக்குங்கள்..!" – சீன அதிபருக்கு எதிராகப் போராடும் மக்கள்

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2012-லிருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகச் செயலாற்றிவரும், ஜி ஜின்பிங், கடந்த 2013 முதல் அதிபராகப் பதவியிலிருக்கிறார். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தேசிய மாநாடு, நாளை மறுநாள்(அக்டோபர் 16) நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் முக்கிய முடிவாக, சீனாவின் அடுத்த அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்த நிலையில், தற்போது அதிபராகப் பதவி வகிக்கும் ஜி ஜின்பிங்கே மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்போவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதனால், சீனாவின் பல இடங்களில் அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிராக மக்கள் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதன் ஒருபகுதியாக பீஜிங் நகரின் ஒரு மேம்பாலத்தில், அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிராக பேனர்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிராக பேனர்

சீன மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த பேனரில், “கோவிட் பரிசோதனைக்கு நோ சொல்லுங்கள், உணவுக்கு யெஸ் சொல்லுங்கள். லாக்டவுனுக்கு நோ சொல்லுங்கள், சுதந்திரத்துக்கு யெஸ் சொல்லுங்கள். பொய்களுக்கு நோ சொல்லுங்கள், கண்ணியத்துக்கு யெஸ் சொல்லுங்கள். கலாசாரப் புரட்சிக்கு நோ சொல்லுங்கள், சீர்திருத்தத்துக்கு யெஸ் சொல்லுங்கள். பெரும் தலைவருக்கு நோ சொல்லுங்கள், ஓட்டுரிமைக்கு யெஸ் சொல்லுங்கள். அடிமையாக இருக்காதே, குடிமகனாக இரு!” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிராக பேனர்

மேலும் ஜி ஜின்பிங்குக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த மற்றொரு பேனரில், “வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள், சர்வாதிகாரியும் தேசத் துரோகியுமான ஜி ஜின்பிங்கை நீக்குங்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பேனர்கள் குறித்த படங்கள், விடியோக்கள் போன்றவை சமூக வலைதளங்களில் வைரலாக, சீன மக்களிடையே இது பேசுபொருளானது. தொடர்ந்து இது மேற்கத்தியச் சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாக, சீன அரசு இதுதொடர்பான செய்திகளைச் சீன சமூக ஊடகங்களிலிருந்து நீக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.