உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக (Chief Justice of India (CJI)) டி.ஒய். சந்திரசூட் அடுத்த மாதம் பதவியேற்கவிருக்கிறார். இவரைப் போலவே இவரின் தந்தை ஒய்.வி.சந்திரசூட்டும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்திருக்கிறார். இதன்மூலம், இந்திய வரலாற்றில் முதன்முறையாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தந்தை, மகன் பதவி வகித்த சாதனை நிகழவிருக்கிறது.

50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் :
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் வரும் நவம்பர் மாதம் 8-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அப்படி ஓய்வுபெறுவதற்குமுன்பாக, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை சிபாரிசு செய்யுமாறு, மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதியிடம் கேட்பது வழக்கம். அதேபோல, கடந்த அக்டோபர் 7-ம் தேதி மத்திய அரசு சார்பாக, மத்திய சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜூ, அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை சிபாரிசு செய்யக்கோரி தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதினார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட யு.யு.லலித், மூத்த நீதிபதியான டி.ஒய். சந்திரசூட் பெயரை சிபாரிசு செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மேலும், அந்தக் கடிதத்தின் நகலை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடமும் ஒப்படைத்தார். இந்த நிலையில், நீதிபதி சந்திரசூட், அடுத்த மாதம் 9-ம் தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார். அவர், 2022 நவம்பர் 9-ம் தேதி முதல் 2024 நவம்பர் 10-ம் தேதி வரை அப்பதவியில் இருப்பார்.
தந்தையும் மகனும் பகிர்ந்துகொள்ளும் சாதனை:
இந்தப் பதவியேற்பின் மூலம், இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதி என்றப் பெயரைப் பெறும் டி.ஒய். சந்திரசூட், மற்றொருப் புகழையும் தனது தந்தையுடன் பகிர்ந்துகொள்கிறார். அதாவது, இவரின் தந்தை ஒய்.வி சந்திரசூட்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருப்பதால், இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்திருக்கின்றனர் என்றப் புகழைப் பெறுகின்றனர்.

நீண்டகால நீதிபதி ஒய்.வி.சந்திரசூட்:
டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தையான, முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி சந்திரசூட், 1978-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். தொடர்ந்து 7 ஆண்டுகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருப்பதால், அந்தப் பொறுப்பில் மிக அதிக ஆண்டுகள் பதவி வகித்த ஒரே நபர் என்றப் பெருமையை ஒய்.வி.சந்திரசூட் பெற்றிருக்கிறார். இவர் தலைமை நீதிபதியாக இருந்தபோது பல அதிரடித் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். குறிப்பாக, “கிஸ்ஸா குர்சி கா” (Kissa Kursi Ka) படம் தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு சிறை தண்டனை விதித்தார். இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் சஞ்சய் காந்தியின் அரசியலை நையாண்டி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப்படம், எமர்ஜென்சி காலத்தில் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.

தந்தையின் இரண்டு தீர்ப்புகளில் முரண்பட்ட மகன்:
டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அவரது தந்தை ஒய்.வி.சந்திரசூட்டின் இரண்டு முக்கியமான தீர்ப்புகளை ரத்து செய்தார்.
வழக்கு 1:
1976-ம் ஆண்டு ADM ஜபல்பூர் (ADM Jabalpur vs. Shivkant Shukla) வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், `அவசர காலத்தின்போது எவரேனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் அது தவறானதாக, சட்ட விரோதமானதாக இருந்தாலும்கூட அதை எதிர்த்து எந்த உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க முடியாது’ எனத் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வழங்கிய 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒய்.வி. சந்திரசூட்டும் ஒருவர். இந்தநிலையில், 2017-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட தனிமனித உரிமைகள் சம்மந்தமான ஒரு வழக்கில், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 1976-ன் அவசரநிலையை ஆதரித்த சர்ச்சைக்குரிய உத்தரவை ரத்து செய்தது. அந்த உத்தரவை ரத்து செய்த 9 நீதிபதிகளில் மகன் டி.ஒய்.சந்திரசூட்டும் ஒருவர்.
வழக்கு 2:
1985-ம் ஆண்டு, நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், “விபசாரச் சட்டம்(497) அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும்” என தீர்ப்பு வழங்கினார். இந்த நிலையில், 2018-ம் ஆண்டு நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நாம் நமது தீர்ப்புகளை இன்றைய காலத்திற்கு பொருத்தமானதாக மாற்ற வேண்டும். விபசார சட்டம் என்பது ஆணாதிக்கத்தின் குறியீடாக்கப்பட்ட விதி” என்றுகூறி அந்த தீர்ப்பை ரத்து செய்தார்.

நீதித்துறையில் டி.ஒய்.சந்திரசூட் கடந்துவந்த பாதை:
உச்ச நீதிமன்றத்திலும், மும்பை உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட் (Dhananjaya Y. Chandrachud), 1998-ம் ஆண்டு தனது 39-வது வயதிலேயே மும்பை உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு, இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, டி.ஒய்.சந்திரசூட் வழக்கறிஞராக இருந்த காலத்தில், ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டம் கற்பிக்கும் பேராசிரியராக இருந்தார். 2000-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு 13 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர், 2013-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். அடுத்த மாதம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவிருக்கிறார்.

டி.ஒய்.சந்திரசூட் வழங்கிய முக்கியமான தீர்ப்புகள்:
ஆதார், தனியுரிமை, கருணைக்கொலை, தன்பாலினச்சேர்க்கை, பாலியல் தொழில், சபரிமலையில் பெண்களின் நுழைவு, பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமை, திரையரங்குகளில் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைப்பது, ஹாதியா வழக்கு, மருத்துவக் கல்லூரி வழக்குகள் போன்ற பல்வேறு முக்கியமான வழக்குகளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது கடந்தகாலங்களில் வழக்கியிருக்கிறார்.