ஒசூர் அரசுப் பள்ளி வகுப்பறைகளில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 100+ மாணவர்களுக்கு சிகிச்சை

கிருஷ்ணகிரி: ஓசூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் வகுப்பறையில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – காமராஜ் காலனியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தமிழ், ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகள் கொண்ட பள்ளியாக செயல்படும் கட்டிடத்தின் முதல் தளத்தில் 6, 7-ஆம் வகுப்பு மாணவர்கள் பாடம் பயின்று வந்தநிலையில் அடுத்தடுத்து மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். சுமார் 150 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அருகே உள்ள வகுப்பறை ஆசிரியர்கள் மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மயங்கி மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வகுப்பறைகளிலிருந்த மாணவர்கள் வெளியே மைதானத்தில் அமர வைக்கப்பட்ட பிறகும் மாணவர்கள் மயங்கியதால் பல்வேறு இடங்களிலிருந்த ஆம்புலன்ஸ் மூலம் ஒசூர் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாணவர்கள் மைதானத்தில் அமர வைக்கப்பட்டு, பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்

வகுப்பறையின் ஜன்னல் வழியாக ஒருவித துர்நாற்றம் வீசியதாலே இந்தச் சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. எனினும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் மாநகராட்சி ஆணையர் அரசியல் பிரமுகர்கள் குழந்தைகளிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறும்போது, “ஓசூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 100 குழந்தைகள் மயக்கமடைந்துள்ளதாக பிற்பகல் சுமார் 3.15 மணி அளவில் தகவல் கிடைத்தது. குழந்தைகள் அனைவரும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 67 குழந்தைகள் (மாணவ, மாணவிகள் ) சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளும் பாதுகாப்புடன் உள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு ஏற்கெனவே இருந்த சிறுநோயின் காரணமாக மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இது என்ன காரணத்தினால் ஏற்பட்டது என்பது குறித்து அந்த பள்ளிக்கு உதவி ஆட்சியர், எம்எல்ஏ, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஓசூர் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதை விரைவில் கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” கூறினார். அப்போது ஓசூர் உதவி ஆட்சியர் சரண்யா, எம்எல்ஏ பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி உடனிருந்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.