கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு விசுவாசபுரத்தை சேர்ந்த ரங்கசாமியின் மகன் குமார் அப்பகுதியில் ஆர்பிகே கெமிக்கல்ஸ் என்ற கம்பெனியை நடத்தி வருகிறார். அதில் பெயிண்டில் கலக்கக்கூடிய தின்னரை மொத்தமாக பேரலில் வாங்கி தனி பாட்டிலில் அடைத்து கோயம்புத்தூர் முழுவதும் பெயிண்ட் கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை அவரது கம்பெனியில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் கம்பெனியின் மேல் கூரை உடைந்து விழுந்து உள்ளது. கம்பெனியில் வேலையில் இருந்த வேலையாட்கள் அனைவரும் காயங்கள் ஏதும் இல்லாமல் தப்பியுள்ளனர். இதனை அடுத்து கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் தீ அணைக்க முடியாததால் அதிக அளவில் தீ பரவியுள்ளது. மேலும் கம்பெனியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தின்னர் பேரல்கள் வெடித்து சிதறியுள்ளது. தீ விபத்து காரணமாக சரவணம்பட்டி பகுதி முழுவதும் கரும்புகையினால் சூழப்பட்டதால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் குமாருக்கு கை கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கோவிந்தம்பாளையம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.