ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்கில் முதல்வர் பாகலுக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி, தொழிலதிபர்களை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு நிலக்கரி சப்ளை செய்யும் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள், ஆளும் கட்சி பிரமுகர்கள் கமிஷன் வாங்கி சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்வதாக அமலாக்க துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, ஒரு கலெக்டர் உட்பட மூத்த அதிகாரிகள், முன்னாள் எம்எல்ஏ, மாநில விதை கழகத்தின் தலைவர் அக்னி சந்திரகார், தொழிலதிபர் சூர்யகாந்த் திவாரி உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை 2 நாட்களுக்கு முன் சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் ரூ.4 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சோதனைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு நெருக்கமானவர்கள். இந்நிலையில், சட்டீஸ்கர் இன்போடெக் ப்ரோமோஷன் சொசைட்டியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் வரும் சட்டீஸ்கர் கேடர் ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோய், இந்திரமணி குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் அகர்வால் மற்றும் தலைமறைவான தொழிலதிபர் சூர்யகாந்த் திவாரியின் மாமா லக்ஷ்மிகாந்த் திவாரி ஆகிய 3 பேரையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை தொடங்கியது முதல் தலைமறைவாக உள்ள ராய்கர் மாவட்ட கலெக்டர் ராணு சாஹு என்பவரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.