புதுச்சேரி: சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கையில்லை என்பதால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக, உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் தெரிவித்தார்.
இவ்வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக செயல்படக் கோரி ப.பா மோகனை சந்தித்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் பேசினர். அவரும் ஒப்புகை கடிதம் தர முடிவு எடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த ஜூலை 13-ல் விடுதியில் இருந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தினர், மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, உயிரிழந்த மாணவி உடல் கடந்த ஜூலை 14-ல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர், அரசு டாக்டர்கள் 3 பேர் கொண்ட குழு முன்னிலையில் மாணவியின் உடல் கடந்த மாதம் 19-ந் தேதியன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு ஜூலை 23-ம் தேதியன்று மாணவியின் உடலை அவரது பெற்றோர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.
மேலும் மாணவியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் 3 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தும், இந்த குழுவினர் மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தங்கள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி ஜிப்மர் மருத்துவ குழுவினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தனர். சிபிசிஐடி இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் வாதிட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர காரணமான சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் புதுச்சேரிக்கு வழக்குக்காக இன்று வந்தார். அவரை மாணவி பெற்றோர் ராமலிங்கம் – செல்வி ஆகியோர் சந்தித்து பேசினர். அதுதொடர்பாக இறந்த மாணவியின் தாய் செல்வி கூறுகையில், “என் மகள் வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ப.பா. மோகனை வர கோரினோம். அவரும் ஒப்புதல் தந்துள்ளார்.
சிபிசிஐடி விசாரணையில் முழு நம்பிக்கையில்லை. ஏற்கெனவே முடிவு செய்து தற்கொலை என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். பள்ளி நிர்வாகத்துக்கு சார்பாகதான் செயல்படுகின்றனர். பாரபட்சமற்ற புலன் விசாரணை நடத்த சிறப்புக் குழு நியமித்து விசாரித்து நடவடிக்கைக் கோரி முதல்வரையும், டிஜிபியையும் சந்திக்க உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ப.பா. மோகன் கூறுகையில், “என்னை சிறப்பு வழக்கறிஞராக ஆஜராக சிறுமியின் பெற்றோர் கோரினர். ஒருதலைப்பட்சமாக சிபிசிஐடி விசாரிப்பதால் பாரபட்சமற்ற புலனாய்வு விசாரணை கோரி முதல்வரையும், டிஜிபியையும் சந்திக்க உள்ளனர். அரசியலமைப்பு சட்ட 21வது விதிப்படி பாரபட்சம் இல்லாத புலன் விசாரணை தேவை. அதற்கு ஏற்ப சிறப்பு வழக்கறிஞர் நியமிக்க கோருகின்றனர். சிறப்பு வழக்கறிஞராக வாதிட ஒப்புகை கடிதம் தரவுள்ளேன்” என்று தெரிவித்தார்.