தமிழக முழுவதும் இன்று நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர் சித்ரா, ஆய்வாளர் அருள் பிரசாத் உள்ளிட்ட ஏழுக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உள்ள ரகசிய அறையில் ரூ. 75 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 75 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பணத்திற்கு திருவாரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பொறுப்பு என்பதால் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து அந்த அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மேலும் அங்கு பணியாற்றும் அனைத்து அதிகாரியிடமும் பணம் இருக்கிறதா என போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல லட்ச ரூபாய் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் முழு விவரம் சோதனை முடிந்த பிறகு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.