மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 10 கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் என மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசியபின் இறுதியாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச ஆரம்பித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகளை செயல்படுத்துவதில் இருக்கும் இடர்பாடுகள், செலவினங்கள் குறித்து புள்ளி விவரங்களை எடுத்துரைக்க, அதனை தடுத்த செல்லூர் ராஜு, மக்களின் தேவைகளை நாங்கள் சொல்கிறோம். அதற்கு தீர்வு சொல்வதை விடுத்து, காரணம் சொல்ல வேண்டாம். காரணங்களை கேட்க நாங்கள் இங்கு வரவில்லை என்று கூறிவிட்டு கூட்டத்தை புறக்கணிப்பதாக வெளியேற முற்பட்டார். அவருடன் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பாவும் செல்ல முற்பட, அப்போது எழுந்த பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அதிமுக முன்னாள் அமைச்சர்களை சமானதானப்படுத்தினார்.
இறுதியாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கோரிக்கைகள் நிறைவேறாது என்று நான் கூறவில்லை. சிக்கல்களை தான் பதிவு செய்தேன். அது உங்களுக்கு மனவருத்தம் ஏற்படுத்தி இருந்தால் நான் பேசவில்லை. இதற்கு முன்பு இப்படி ஒருகூட்டம் நடந்திருக்கிறதா?, வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது” என்று சொல்லி கூட்டத்தை முடித்துக்கொண்டார்.
அப்போது வெளியேறிய செல்லூர் ராஜூவை அமைச்சர் மூர்த்தி கன்னத்தை கிள்ளி சமாதானப்படுத்தினார். தொடர்ந்து கூட்டரங்கில் இருந்து முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் சிரித்துப்பேசி ஒருவருக்கொருவர் கைகொடுத்துக் கொண்டு கிளம்பினர். இந்தக் காட்சிகள் இப்போது கவனம் பெற்றுவருகின்றன.