மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் காவிரி கரையோரம் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், நேற்று முன்தினம் அதிகாலை மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது.
அணை நிரம்பிய நிலையில் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இருப்பினும், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.