வாஷிங்டன், ”உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, ‘5ஜி’ தொழில்நுட்ப கட்டமைப்பை இந்தியா சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது; இதை மற்ற நாடுகளுக்கும் அளிக்க தயாராகஉள்ளோம்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர்நிர்மலா சீதாராமன் அமெரிக்கா வந்துள்ளார். இங்குள்ள, ‘ஜான் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்’ கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஒரு காலத்தில் சர்வதேச வரையறை, சர்வதேச தரநிலைகள் என்றெல்லாம் பல்வேறு துறைகளில் கூறப்படும் அளவுகோல்களை எப்படியாவது எட்டிப்பிடித்து விட வேண்டும் என்பது இந்தியாவின் முயற்சியாக இருந்தது.
இதை கற்பதே பெரும்பாடாக இருந்தது. இன்றைக்கு, ‘டிஜிட்டல்’ மயமாக்கலில் நாம் சர்வதேச தரநிலையை உருவாக்கி உள்ளோம்.
குறிப்பாக, பணம் செலுத்துதல், அடையாள காணுதல், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் நாம் தரநிலைகளை உருவாக்கி உள்ளோம். நம் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தவற்றில் மக்கள் வைத்த நம்பிக்கையின் காரணமாகவே, நம் பொருளாதாரம் நிலையான பாதையில் இருப்பதாக நினைக்கிறேன்.
கடந்த 2014 – 19 வரையிலான காலகட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தியதால் தான், கொரோனா காலத்திலான பொருளாதார நெருக்கடியை நம்மால் சமாளிக்க முடிந்தது. நிவாரணங்களை உடனடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தது.
இந்தியாவில், ‘5ஜி’ தொழில்நுட்பம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மிக தனித்துவமானது, உள்நாட்டில் உருவாக்கப்பட்டது.
இதை வேறு எங்கிருந்தும் நாங்கள் இறக்குமதி செய்யவில்லை. இதை தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கும் அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement