நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் ஊராட்சியில் தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகள் எங்கும் பச்சைபசேலென பச்சை நிற போர்வை போல காட்சியளிக்கிறது.
இதற்கிடையே, தொடர் மழை காரணமாக தண்டாகவுண்டம் பாளையம் அருகில் உள்ள மலைப் பகுதியிலுள்ள மரங்களில் இருந்து மர அட்டைகள் எனப்படும் சிவப்பு அட்டை பூச்சிகள் ஆயிரக்கணக்கில் ஊருக்குள் நுழைந்து, வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், இந்த பூச்சிகள் உணவுப் பொருள்களிலும் விழுந்து விடுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் சிவப்பு அட்டை பூச்சிகள் அதிக அளவில் இப்பகுதியில் படையெடுத்து வருகிறது. முதலில் பள்ளி வளாகத்தில் இருந்த அட்டை பூச்சிகள் தற்போது தங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் கண்துடைப்பிற்காக மருந்துகள் தெளித்துவிட்டு பிறகு இந்த பகுதி பக்கமே வராததால் தொடர்ந்து சிவப்பு அட்டை பூச்சிகள் ஆயிரக்கணக்கில் இப்பகுதியில் படையெடுத்து வருவதாகவும், இதற்கு அதிகாரிகள் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.