அக்.17, 18-ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரும் 17-ம் தேதியும், தென் மாவட்டங்களில் 18-ம் தேதியும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.15-ம் தேதி (இன்று) விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 26 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

16-ம் தேதி (நாளை) மேற்கண்ட மாவட்டங்கள் (திருவண்ணாமலை நீங்கலாக) மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

17-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டம், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர்,நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

18-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், டெல்டாமாவட்டங்கள், தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு,சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலபகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

14-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, ஈரோடுமாவட்டம் பவானி, திருப்பூரில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.