இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” : கார்த்தி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் ‛சர்தார்'. ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கார்த்தி பேசியதாவது :

மித்ரன் இயக்கிய ‛இரும்புத்திரை' படத்திற்கு பிறகு பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது. சர்தார் படத்தின் கதையை கேட்டதும் தானாகவே உளவாளிக்கான பல பார்வைகள் வந்தது. அனைத்து நடிகர்களின் வாழ்க்கையிலும் இது மாதிரி ஒரு காதபாத்திரம் நிச்சயம் வரும்.

என்னுடைய கேரியரில் இது மிகவும் முக்கியமான படம். மேலும், எத்தனை வேடங்கள் போட்டாலும் எதற்காக போடுகிறோம் என்பதில் தான் அந்த வேடத்திற்கு மரியாதை கிடைக்கும். அதேபோல், நம் இந்திய உளவாளி, நம் மண்ணில் இருக்கும் ஒருவன், அவன் எப்படி சிந்திப்பான், எதற்காக உளவாளி ஆகிறான் என்பது எனக்கு பிடித்திருந்தது. முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடிப்பதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. 40, 50 மற்றும் 60 வயதிற்கு மேல் உடல் ரீதியாக எப்படி மாற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள நேர்ந்தது.

இந்த படம் பெரிய விஷயத்தை பேசுகின்றது. அது எப்படி எளிமையாக புரிய வைக்கப் போகின்றோம் என்று நினைக்கும்போது தான் இப்படத்தின் ஹீரோ என்று கூறிய அதிசய குழந்தையாக ரித்விக் வந்தான். ஜூராசிக் பார்க் படத்தை நம்ப வைத்தது எது என்றால் குழந்தைகளின் ரசனை தான். அவர்களின் ரசனையும், அப்பாவித்தனமும் தான் நம்மை யதார்த்தில் நுழைய வைத்தது. உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும், சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்ப்பை த்ரில்லராக இருக்கும். அனைவரும் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்.

இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வெற்றியடைய வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்த வெற்றிக்கு நீ தகுதியாக இருக்கிறாயா? என்று யோசித்துப் பார் என்று அண்ணன் கூறுவார். அந்த தகுதிக்கு ஏற்ப நாங்கள் உழைத்திருக்கிறோம் என்று நம்புகிறேன். தீபாவளிக்கு சர்தார் மற்றும் சிவாவின் பிரின்ஸ்-ம் வருகிறது. இரண்டு படங்களும் வெவ்வேறு கேளிக்கையுடன் வருகிறது. அனைவருக்கும் சிறப்பு தீபாவளியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வந்தியதேவனுக்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதன்பிறகு வேறொரு படம் கொடுக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

இவ்வார் கார்த்தி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.