சீனாவில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான பதிவுகள் பரவுவதை தடுக்க தணிக்கை குழு அதிரடி நடவடிக்கை!

பீஜிங்,

சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு சீனாவின் முக்கிய அரசியல் நிகழ்வாகும்.

நாளை தொடங்கும் 20ஆவது மாநாட்டில் விதிகளை மாற்றி வாழ்நாள் முழுக்க அதிபராக இருக்கும் சட்டத் திருத்தத்தை ஜி ஜின்பிங் கொண்டு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஜி ஜின்பிங்கிற்கு பதவி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர். இதை வலியுறுத்தி நகரங்களில் சில பகுதிகளில் பேனர்களும் வைக்கப்பட்டு உள்ளன.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், சாலை மேம்பாலத்தில் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பேனர் தொங்கவிடப்பட்டுள்ளது. மாண்டரின் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த பேனரில், ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்றும், அவருக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு சீர்திருத்தம் தேவை, கலாச்சார புரட்சி அல்ல. நாம் கொரோனா பரிசோதனை செய்யாமல் சாப்பிட வேண்டும் என்பதே முக்கியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பேனர்களை வைத்தவர்களை சீன போலீசார் தேடி வருகின்றனர்.ஆனால் இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

சீனாவில் போராட்டம் என்பதே மிகவும் அரிதான ஒன்று. அதிலும் இதுபோன்ற உயர்மட்ட கூட்டம் நடைபெறும் போது, பீஜிங்கில் அரசுக்கு எதிராக வைக்கப்பட்ட போராட்ட பதாகைகள் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அவை உடனே அகற்றப்பட்டன. பீஜிங்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுக்க, தன்னார்வலர்கள் பலர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீன அதிபர் மற்றும் அரசின் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான சமூக ஊடக பதிவுகள், முக்கிய வார்த்தைகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை சீன அரசின் சமூக ஊடக தணிக்கையாளர்கள் தடுத்துள்ளனர்.

சீனாவில் டுவிட்டருக்கு பதிலாக பயன்படுத்தப்படும் வெய்போ வலை தளத்தில் அரசுக்கு எதிரான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் சில ஹேஷ்டேக்குகளை பயன்படுத்த முடியாத வகையில் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் வேறு சில ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி எதிர்ப்பு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றை சீன அரசின் சமூக ஊடக தணிக்கையாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சீனாவில் அரசியல் எதிர்ப்புகள் மிகவும் அரிதானது. எனவே,இந்த பேனர் எதிர்ப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.