காங்கயம் : தேங்காய், கொப்பரை விலை சரிவை சந்தித்துள்ளதால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கும் மேலாக தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. காங்கயம் பகுதியை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தேங்காய், இளநீர், கொப்பரை(தேங்காய் பருப்பு) என தென்னையில் ஒவ்வொன்றும் வருமானம் அளிப்பவை. ஆனால் அண்மைக்காலமாக தென்னை விவசாயத்தில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.
அடிக்கடி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையற்ற கொப்பரை விலையால் தொடர்ந்து தேங்காய் விலை சரிந்து வருகிறது. கட்டுபடி ஆகாத தேங்காய் விலையால் தென்னை விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர். விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஆதார விலை நிர்ணயித்து அரவை கொப்பரை ஒரு கிலோ 105.90 ரூபாய்க்கும், பந்து கொப்பரைகிலோ 110 ரூபாய்க்கும் கொள்முதல் மையங்கள் மூலம் கொள்முதல் செய்து வருகிறது.
இருப்பினும் கொள்முதல் மையங்களில் கொப்பரைகளை விற்க பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் உள்ளதால், விவசாயிகள் பெரும்பாலும் தேங்காய் உலர் களங்கள் நடத்துவோர்களையே நம்பி உள்ளனர். ஆனால் உலர் களங்கள் மூலம் பெறப்படும் கொப்பரை விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நேற்றைய காங்கயம் மார்க்கெட் நிலவரப்படி கொப்பரை கிலோ ரூ.74 க்கு விற்பனை ஆகியது. மேலும் தேங்காய் விலையும் தொடர்ந்து சரிந்து தற்போது 7 ரூபாய் முதல் 8 ரூபாய் வரையே விற்பனையாகிறது. அதே போல தேங்காய் எண்ணெய் விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
பல்வேறு கலப்பட பிரச்சினைகள் காரணமாக தமிழக உற்பத்தி தேங்காய் எண்ணெய்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்த மவுசு குறைந்துள்ளதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தென்னை விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாவார்கள் என்று தெரிவிக்கின்றனர்.
தென்னையை வளர்க்க செலவிடும் உரம், பூச்சி மருந்து, பராமரிப்பு கூலி, பறிப்பு கூலி, உரிகூலி, போக்குவரத்து செலவு என பல்வேறு செலவுகளுக்கு ஆகும் தொகையை கணக்கிட்டு பார்த்தால் காய் ஒன்றுக்கு சுமார் ரூ.7 க்கும் மேல் செலவாகிறது. ஆனால் தற்போது தேங்காய் காய் ஒன்றுக்கு ரூ.8 வரையே விலை கிடைத்து வருவதாக விவாசயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
தமிழக அரசு தேங்காய் எண்ணெய் உற்பத்தியை கண்காணிப்பது மற்றும் ரேஷன் கடைகளில் வெளிநாட்டு இறக்குமதி எண்ணெயான பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகித்தல், கொள்முதல் மையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டால் தான் தென்னை விவசாயிகள் வாழ்வு ஏற்றம் பெறும் என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது: தேங்காய் கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடும் போது தற்போது 100சதவீத விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு ஒரு கட்டுபடியான விலை வேண்டும் என்பதற்காக கொப்பரை பருப்பு கொள்முதல் என்று சொல்கிறார்கள். கடந்த காலங்களில் இது போன்று கொள்முதல் செய்தார்கள் விசாயிகளுக்கு எந்த பலனும் கிடையாது.
இடைத்தரகர்களும் எண்ணெய் பிழியும் ஆலை முதலாளிகளும் அதிகாரிகளும் கொள்ளை அடித்தார்கள். தொன்னை விவசாயிகளுக்கு அரசாங்கம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைத்தால், பங்கீட்டு கடைகள் சத்துணவில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் தரவேண்டும். உணவு மானியத்தை தேங்காய் எண்ணெய்க்கு தாருங்கள்.
வெளிநாட்டு இறக்குமதிக்கு மானியம் தாரதீர்கள். வெளிநாட்டு விவசாயியை காப்பாற்றதீர்கள். இந்திய விவசாயி நலனையும் பாருங்கள். கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கவேண்டும். நீரா இறக்க கட்டுபாடுகளை தளர்வு செய்யவேண்டும். தேங்காய கலங்களில் சல்பர் புகை மூட்டம் இல்லாத களங்களே கிடையாது. அதே போல எண்ணெய் பிழியும் ஆலைகளை பொருத்தவரை கலப்படம் செய்யாத ஆலைகளே கிடையாது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றை செய்தாலே தென்னை விவசாயிகளை காத்திட முடியும். என்றார்.