பாரி மன்னனுக்கு வழிகாட்டி; விவசாயிக்கு நண்பன்! கரூர் – திண்டுக்கல்லில் தேவாங்கு சரணாலயம்!

இந்தியாவிலேயே தேவாங்குகள் கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் பரந்து விரிந்துள்ள காப்புக்காடுகளில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், சமூக ஆர்வலர்களின் நெடுங்கால கோரிக்கையை ஏற்று, தமிழ அரசு இந்தப் பகுதியில் தேவாங்கு சரணாலயம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இங்கு 11,806 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட இருக்கிறது.

தேவாங்கு

குரங்கு குடும்பத்தைச் சேர்ந்த இரவாடி பாலூட்டி இனம் தேவாங்கு. கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி காலத்தில் இருந்த கடற்படையில் திசைகாட்ட இந்த தேவாங்குகளை தான் பயன்பயன்படுத்தியதாக வரலாறு சொல்கிறது. இரவில் மட்டுமே வேட்டை மற்றும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை, அதன் உடம்பில் இருக்கும் ரோமங்கள் மூலமாக விதைபரவல் செய்தல், விவசாய பயிர்களுக்கு ஊறு செய்யும் பூச்சிகளை அழித்தல் என்று தேவாங்கின் பயன்பாடு உயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக கருதப்படுகிறது.

ஆனால், மனிதர்கள் செய்யும் தவறுகளால் இந்த இனம் மெல்ல மெல்ல அழிந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால், “சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் தேவாங்குகளைக் காப்பாற்ற கிழக்கு மலைத்தொடர்ச்சிக் குன்றுகளைத் தேவாங்குகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்” என்று சூழலியல் ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு இங்கு தேவாங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு, சரணாலயம் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 30 மலையடிவாரக் கிராமங்களில் தேவாங்குகள் குறித்து, `சீட்ஸ் அறக்கட்டளை’ என்ற அமைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் இயக்குநர் முத்துசாமியிடம் பேசினோம்.

“நான்கு வகை தேவாங்குகள் உள்ளன. அவற்றில் சாம்பல் நிற தேவாங்குகள்தான் இந்த மலைக்குன்றுகளில் வசிக்கின்றன. சாம்பல் நிற தேவாங்குகள் ஸ்ரீலங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம், அய்யலூர் வனப்பகுதி எனப் பல பகுதிகளில் வாழ்கின்றன. உலக அளவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் எல்லா வகை தேவாங்குகளும் வாழ்கின்றன. உலக அளவில் சாம்பல் நிற தேவாங்குகள் இந்த அய்யலூர், கடவூர் காப்புக்காடுகளில்தான் அதிகம் வசிக்கின்றன.

முத்துசாமி

அதேபோல், உலக அளவில் தேவாங்கு இனத்தின் புகலிடமாக இங்குள்ள மலைக்குன்றுகள் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட, சாம்பல் நிற தேவாங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதற்குக் காரணம், அந்த மலைக் குன்றுகளையொட்டி வாழும் மக்களின் தவறான புரிதல்களும், வாழ்வியலும்தான். அய்யலூர் வனப்பகுதிகளில் உள்ள வறண்ட நில புதர்களான காப்புக்காடுகள்தான் தேவாங்குகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. தேவாங்குகள் 100 முதல் 800 மீட்டர் உயரம் வரையிலான மலைக்கரடுகளில்தான் வசிக்கும்.

அதாவது, மலை, பிறகு கிராமங்கள், அதைத்தொடர்ந்து வரும் மலை என்று இருக்கும் இடம்தான் தேவாங்குகள் வசிப்பதற்கு ஏற்ற இடம். அத்தகைய சூழல் உள்ள இந்த அய்யலூர் வனப்பகுதியில் உள்ள தேவாங்கு இனம் அழியும் தருவாயில் இருக்கிறது. அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் காடுகளில் மேற்கொள்ளும் `சிறுவன மகசூல்’ ஒரு காரணம். அதாவது, இங்குள்ள காப்புக்காடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் 33 வகையான உணவு மற்றும் மூலிகைப் பொருள்களை அங்கு வசிக்கும் மக்கள் எடுப்பதால், காடுகளின் தன்மை மாறி, தேவாங்குகள் வசிப்பதற்குரிய தன்மை தடுக்கப்படுகிறது.

சுவர்களில் சீட்ஸ் அறக்கட்டளை விழிப்புணர்வு

சுண்டைக்காய், உசுல், பிரண்டை, புளி, ஆவாரை, சாரநத்தி வேரு, துளசி, வள்ளிக்கிழங்கு, கொடிக்கிழங்கு, தேன், சீதா பழம், குருஞ்சாண் பழம், மூலிகை என்று பல்வேறு சிறுவன மகசூலை எடுக்கிறாங்க. அதோடு, விறகுக்காகவும், வீடு உள்ளிட்ட அமைப்புகளை செய்ய மரங்களாகவும் காடுகளை அழிக்கிறாங்க. மக்கள் தொகை பெருக்கத்தால், காடுகளை மக்கள் பயன்படுத்தும் அளவு கூடுவதாலும், இங்குள்ள மக்கள் கால்நடைகளை மேய்க்க காடுகளுக்குள் செல்வதாலும், காடுகளில் அழுத்தம் அதிகமாகி, அதன் தன்மை மாறிப்போய்விடுகிறது. அதன்விளைவாகவும், தேவாங்குகள் அருகிப்போகத் தொடங்கிவிட்டன.

இப்படி, இங்கு வசிக்கும் மக்களால் தேவாங்குகளுக்கு மறைமுகமாகப் பாதிப்பு ஏற்படுவது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் நேரடியாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஜோசியம் பார்க்க கிளி மாதிரி தேவாங்கைப் பயன்படுத்த, இதை இங்கே வேட்டையாடுறாங்க. முடக்குவாதத்துக்கு தேவாங்கில் இருந்து எண்ணெய் தயாரிக்க வேட்டையாடுறாங்க. `ஆண்மை விருத்திக்கு தேவாங்கு கறி சாப்பிட்டா நல்லது’னு சொல்லி வேட்டையாடுறாங்க.

இன்னொரு பக்கம், கர்ப்பிணிப் பெண்கள் தேவாங்கைப் பார்க்க நேர்ந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் தேவாங்கு மாதிரி அமைப்புடன் பிறக்கும் என்கிற மூடநம்பிக்கையிலும் தேவாங்கைக் கொல்றாங்க. அதேபோல், தேவாங்குகள் இரவு 7 மணிக்குதான் காடுகளை விட்டு வெளியே இரை தேடி வரும். நள்ளிரவு ஒரு மணி வரை உணவு வேட்டை நடத்தும். இனப்பெருக்கம் காலமும் அதுதான். அப்படி, இரவு நேரங்களில் சாலையைக் கடக்கும் தேவாங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன.

அய்யலூர் மலை

அதேபோல், இந்த மலைக்கரடுகளையொட்டி உள்ள வயல்களில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதால், அதனாலும் தேவாங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல், காப்புக்காடுகளின் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும் மின்வயர்களாலும் தேவாங்குகள் விபத்துக்குள்ளாகி இறக்கின்றன.

அதேபோல், சிறுவர்கள் அணிலை அடிப்பது போல், தேவாங்கை விளையாட்டுக்காக அடித்துக் கொல்றாங்க. இப்படி, பல்வேறு வகையில் தேவாங்குகள் அழிக்கப்படுது. அதேபோல், வனத்துக்குள் போகும் மின்சாரக் கம்பிகளை கேபிளுக்குள் பதித்து, அதன்வழி மின்சாரம் கொண்டு போக வேண்டும். அதனால்தான், இங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்து வந்தோம். மக்களிடம் தேவாங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தோம். தற்போது, தமிழக அரசு சரணாலயம் அமைய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சரணாலயம் வேண்டும் எனத் தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு வந்த விகடனுக்கு நன்றி!” என்றார்.

அடுத்து பேசிய, கடவூர் தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞரான பாலசுப்ரமணி,

“அதிகபட்சம் 300 கிராம் எடைகொண்ட தேவாங்கு, ஓர் அரிய உயிரினம். விவசாயத்துக்கு எதிரியாக இருக்கும் புழு, பூச்சிகள் தான் இதற்கு உணவு. அதேபோல், உசுல் இலை கொழுந்தையும் விரும்பி சாப்பிடும். காய்ந்துபோன திருகுகல்லிக்குள் இருக்கும் சிறு புழுக்களையும் விரும்பி உண்ணும். மரப்பொந்துகள் மற்றும் புதர்களில் வசிக்கும். இருபது வருடங்களுக்கு முன்பு கணக்கிலடங்காத வகையில் இங்கே தேவாங்குகள் இருந்திருக் கின்றன. ஆனால், 2016 – 17-ம் ஆண்டு கணக்குபடி 3,200 தேவாங்குகள்தான் இங்கே இருப்பதாக வனத்துறை சொல்கிறது.

பாலசுப்ரமணி

இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தேவாங்கு பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் (பிரிவு ‘அ’) முதலிடத்தில் உள்ளது. அதேபோல், சர்வதேச இயற்கை பாதுகாப்பு கழகமும் பாதுகாக்கவேண்டிய உயிரின பட்டியலில் இதை சேர்த்திருக்கிறது. தேவாங்குகள், விதை பரவலுக்கும் துணை நிற்கிறது. அதன் மீது இருக்கும் ரோமங்கள் மூலமாக விதைப்பரவலை செய்கிறது. தேவாங்குகளை பாதுகாக்க, இந்தப் பகுதியை தேவாங்குகள் சரணாலயமாக அல்லது வனப்பாதுகாப்பு பகுதியாக தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.