குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கோபால் இத்தாலியா பேசியதாக ட்விட்டரில் பா.ஜ.க ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில், “எளிமையான நபர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்திற்கான செலவுகளை வெளியிடுமாறு, நீங்கள் ஏன் கேட்கவில்லை? பிரதமருக்கு ஏற்றவாறு, அவரின் தாயார் ஹிராபாவும் நடித்துக்கொண்டிருக்கிறார். 70 வயதை நெருங்கும் மோடியும், 100 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவரின் தாயாருமான ஹிராபாவும் தங்கள் நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்” எனப் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
Arvind Kejriwal, gutter mouth Gopal Italia now abuses Hira Ba with your blessings. I profer no outrage, I don’t want to show how indignant Gujaratis are but know this you have been judged & your party shall be decimated electorally in Gujarat. Now the people will deliver justice. pic.twitter.com/Ljh9R1DamD
— Smriti Z Irani (@smritiirani) October 13, 2022
இந்த வீடியோவை ட்விட்டரில் அகமதாபாத்தின் பா.ஜ.க-வின் ஐ.டி-விங் ஊழியர்களின் ஒருங்கிணைப்பாளர் யக்னேஷ் தவே-தான் முதன் முதலில் பதிவிட்டார். அதில், “பிரதமரின் தாயார் எந்த அரசியலுலும் ஈடுபடவே இல்லை. ஆனால், அவரை இவ்வளவு கீழ்நிலையான வார்த்தைகளால் கேலி செய்யும் இந்த மனிதனின் கலாசாரத்தை பாருங்கள். இது குஜராத் மக்களின் பண்பல்லவே!” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா, “பிரதமர் மோடி மீது அவதூறுகளை பரப்புவதும், குஜராத்தின் பெருமையையும் மண்ணின் மகனையும் தூற்றுவதும், 27 ஆண்டுகளாக தனக்கும் பா.ஜ.க-வுக்கும் வாக்களித்த ஒவ்வொரு குஜராத்தியையும் அவமதிக்கும் செயலாகும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை பல பா.ஜ.க பிரமுகர்கள் வேகமாகப் பகிர்ந்து அவர்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ஸ்மிருதி இரானியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எதிரான கருத்து தொடர்பாக, ஆம் ஆத்மி குஜராத் பிரிவு தலைவர் கோபால் இத்தாலியா தேசிய மகளிர் ஆணையத்தில் (NCW) ஆஜர்படுத்தப்பட்டு, டெல்லி காவல்துறையால் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்த வீடியோ தொடர்பாக ஆம் ஆத்மி தலைவர், “நான் பேசியதாக பரப்படும் வீடியோ மிகப் பழையது. அதை தோண்டி எடுத்து அரசியல் செய்கிறார்கள்” என்றும் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

பா.ஜ.க-வின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்த டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், “குஜராத்தில் உள்ள படேல் சமூகத்தினர் இந்த நடவடிக்கைக்காக பா.ஜ.க மீது கோபத்தில் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.