திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதத்தையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று 68,675 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 32,533 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ3.82 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று புரட்டாசி மாத 4ம் சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதல் திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் இன்று காலை நிலவரப்படி திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகள் நிரம்பி பக்தர்கள் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். வரும் 18ம் தேதி ஐப்பசி மாதம் பிறக்கிறது. இருப்பினும் அடுத்த சனிக்கிழமையும் புரட்டாசி 5வது சனியாக கருதி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.