முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான, புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த பாண்டித்துரை (47) என்ற நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 12-ம் தேதி ஐடி சோதனை நடந்தது. மேலும், அவரது புதுக்கோட்டை மச்சுவாடி அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலை, சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை, மற்றொரு அலுவலகம் உட்பட 5 இடங்களில் 30 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் 3வது நாளாக நேற்றும் பாண்டித்துரையின் வீடு, அலுவலகம் உட்பட 5 இடங்களில் சோதனை நடந்தது. 15க்கும் அதிகமான அதிகாரிகள் காலை 8.15 மணி முதல் சோதனையில் ஈடுபட்ட தொடங்கினர். பாண்டித்துரை வீட்டில் 2 நாட்கள் நடந்த சோதனையில், ரூ.50 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சொத்து ஆவணங்கள் குறித்து அவரது வீட்டில் இருந்த மேலாளர் பீட்டர் மற்றும் அங்கு உள்ளவர்களிடம் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை 14 மணி நேரம் தொடர் விசாரணை நடந்தது. கான்ட்ராக்டர் இவ்வளவு சொத்துகள் வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வந்தது என மேலாளரிடம் அதிகாரிகள் துருவித் துருவி விசாரித்தனர்.
அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், நெடுஞ்சாலைகளில் ஒளிரும் போர்டுகள் தமிழகம் முழுவதும் அமைக்கும் பணிக்கான டெண்டர் பாண்டித்துரையின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு போர்டு அமைக்க ரூ.300 தேவை என்றால் ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம், அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டின் மொத்த பணமும் ஆளுகிறவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட அளவுக்கு கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறையில் அமைச்சர் மற்றும் முதல்வராக இருந்த காலத்தில் பாண்டித்துரையின் நிறுவனத்துக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்டதால், இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றது. இந்த வளர்ச்சியின் மூலம், ஒரு கட்டத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களை தயாரிக்கும் நிறுவனத்தையே பாண்டித்துரை தொடங்கினார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் இந்த நிறுவனத்தில் தயாரித்து வழங்கப்பட்டது. பாண்டித்துரை ஸ்டிக்கர் தயாரிக்கும் கம்பெனி ஆரம்பித்த பிறகு, போக்குவரத்து துறையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான கான்ட்ராக்ட் பாண்டித்துரைக்கே வழங்கப்பட்டது.
இந்த கம்பெனியில் மட்டுமே தனியார் வாகனங்கள் ஸ்டிக்கர் பெற வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர். போக்குவரத்து அதிகாரிகளும், பாண்டித்துரையிடம் ஸ்டிக்கர் வாங்கினால் மட்டுமே உரிமம் வழங்கி வந்தனர். இந்த நிறுவனத்துடன் போட்டிபோட்ட நிறுவனங்களுக்கு இந்த டெண்டர் வழங்கப்படவில்லை. இதன் மூலமும் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்தன. இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் கண்டித்தது. ஆனாலும் ஆட்சி முடியும்வரை பாண்டித்துரையின் நிறுவனத்துக்கு மட்டுமே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போக்குவரத்து ஸ்டிக்கர் கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது.
இந்த முறைகேடு பணமும் ஆளும் முக்கிய விஐபி ஒருவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான 2 கான்ட்ராக்டர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது பாண்டித்துரையின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருப்பதும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.