ஸ்ரீநகர் :இந்திய ராணுவத்தின் தீரமிகு மோப்ப நாயான ‘ஜூம்’ வீர மரணமடைந்ததை அடுத்து, அதன் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்திய ராணுவத்தில், ‘ஆப்பரேஷன் தாங்பாவா’ என்ற அதிரடிப் பிரிவில், ஜூம் மோப்ப நாய் இருந்து வந்தது. பயங்கரவாதிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் வீரதீரத்துடன் செயல்பட்டு வந்தது.
கடந்த ௧௦ல் ஜம்மு – காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில், லஷ்கர் – ஈ – தொய்பா பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, அவர்களது இருப்பிடத்தை பாதுகாப்பு படையினருக்கு இந்த நாய் காட்டியது.
மேலும், பயங்கரவாதிகளில் ஒருவனை கடித்து குதறி நிலை குலையச் செய்தது. அப்போது, நாய் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையிலும், மற்றொரு பயங்கரவாதியின் இருப்பிடத்தையும் நாய் காட்டி தந்தது.
அதன்பின் ராணுவ வீரர்கள், இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
அதிக ரத்த போக்கால் மயங்கிய ஜூம், ஸ்ரீநகர் ராணுவ கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் வீரமரணம் அடைந்தது.
பதாமி பாக் கன்டோன்மென்ட்டில் உள்ள சினார் போர் நினைவு சின்னம் பகுதியில், ஜூம் மோப்ப நாயின் உடல் அடக்கம் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் நடந்தது.
இதில், சினார் படை கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் அவ்ஜ்லா, அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement