வாஷிங்டன்: உலகின் மிக மோசமான நாடு பாகிஸ்தான் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்லவோ அல்லது திருடப்படவோ வாய்ப்பு இருப்பதாக அவை தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு வரலாறே உள்ளது.அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறி, இது தொடர்பான தொழில்நுட்பத்தை விற்பனை செய்ததாக அந்நாட்டின் அணுஆயுத தந்தை என அழைக்கப்படும் அப்துல் காதர் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “உலகிலேயே மிகவும் மோசமான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாக இருக்கலாம் என நினைக்கிறேன். அந்த நாடு எவ்வித இணக்கமும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்துள்ளது” என்றார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இது அமெரிக்கா மற்றும் இதர நாடுகளுக்கும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.