புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், ஓட்டுப்பதிவு ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக டிசம்பர் 4-ம் தேதிக்குள் நிறைவடையும் எனவும், அதன்பின் இமாச்சல் தேர்தல் முடிவுகளுடன் குஜராத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இமாச்சல பிரதேசம், குஜராத்மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புவெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை இமாச்சல பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலங்களுக்கு 40 நாள் இடைவெளி இருப்பதாலும், பனிக்காலத்துக்கு முன்பாக இமாச்சல பிரதேச தேர்தலை நடத்திமுடிப்பதற்காக அங்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.
பாதிப்பை ஏற்படுத்தாமல்
இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தின் தேர்தல் முடிவு, குஜராத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, குஜராத்தேர்தல் டிசம்பர் 4-ம் தேதிக்குள் ஒரே கட்டமாகவோ அல்லது இரண்டு கட்டமாகவோ நடத்தப்படலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.