திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த 63 வேலம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மகன் கிஷோர் (9). அதே பகுதியைச் சேர்ந்த வேலன் மகன் கதிர்வேல் (11). கிஷோர், கதிர்வேல் இருவரும் நண்பர்கள்.
கிஷோர் 63 வேலம்பாளையம் அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பும், கதிர்வேல் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். கிஷோர், கதிர்வேல் இருவரும் 63 வேலம்பாளையம் அருகே உள்ள மூணுமடை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள குட்டையில் மீன் பிடிக்க சனிக்கிழமை சென்றனர்.

மாலை 6 மணி ஆகியும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. பின்னர் 63 வேலம்பாளையம் அருகே மூணுமடையிலுள்ள குட்டையில் மாணவர்களின் காலணிகள் மிதந்துள்ளன. இதனால் மாணவர்கள் குட்டை நீரில் மூழ்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து மங்கலம் போலீஸார், திருப்பூர் தீயணைப்புத் துறையினர குட்டையில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலாவதாக கதிர்வேலின் உடல் மீட்கப்பட்டது. இரண்டாவதாக கிஷோரின் உடல் மீட்கப்பட்டது. சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.